வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/07/2018)

கடைசி தொடர்பு:15:45 (30/07/2018)

இடுக்கி அணை திறப்பு; முப்படைகளின் உதவியை நாடியது கேரளா!

இடுக்கி அணை திறக்கப்படுவதையொட்டி இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ந்தியாவின் பிரமாண்ட அணைகளில் ஒன்றான இடுக்கி அணைக்கட்டு திறக்கப்படுவதை முன்னிட்டு, கேரள அரசு முப்படைகளின் உதவியை நாடியுள்ளது. 

idukki

இடுக்கி அணைக்கட்டு 2,403 அடி கொள்ளளவுகொண்டது. முல்லைப் பெரியார் அணையைவிட 7 மடங்கு பெரிய அணை இது. கேரளத்தில் பெய்த வரலாறு காணாத மழையால், இந்த அணை 1992-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் நிரம்பியுள்ளது. 2,399 அடியை எட்டியதும், ரெட் அலெர்ட் விடப்படும். 2,400 அடியை எட்டியதும் அணை திறக்கப்படும். முல்லைப் பெரியார் அணை நிரம்பியதையடுத்து அதிக அளவு தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.  இதனால், இடுக்கி அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். செருதோனி பகுதியில் உள்ள 5 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும். முதல்கட்டமாக, 40 செ.மீட்டர் அளவுக்கு ஷட்டர்கள் திறக்கப்படும். விநாடிக்கு 1750 கன அடி நீர் பெரியாரில் வெளியேறும். 

பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது, அலுவா பகுதிதான் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகும். இதனால், அங்கே தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் தயாராக உள்ளனர். இடுக்கி அணை திறக்கப்படுவதையொட்டி, முப்படைகளின் உதவியை கேரளா நாடியுள்ளது. அலுவாவில் 4 கம்பெனி ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய கடலோரக் காவல் படையினரின் படகுகளும் தயார் நிலையில் உள்ளன. விமானப்படையின் இரு ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணிக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இடுக்கி அணை ஆர்ச் அணைக்கட்டாகும். கேரள மின்வாரியத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற அணைகளின் ஆயுள்காலம் 100 ஆண்டுகள்தான். இடுக்கி அணையின் ஆயுள்காலம் மட்டும் 300 ஆண்டுகள்.  இதற்கு முன், 1981 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் இருமுறைதான் இந்த அணை நிரம்பியுள்ளது.  அணை திறக்கப்பட்டபோது 80 கிலோ எடை கொண்ட மீன்கள்கூட  வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க