சாப்பாடு பார்சல் கட்டிக்கொடுக்காததால் ஆவேசம்! ஹோட்டல் ஓனரை சரமாரியாகச் சுட்ட வாலிபர்! | a man allegedly opened gunshot in Uttar Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (30/07/2018)

கடைசி தொடர்பு:16:39 (30/07/2018)

சாப்பாடு பார்சல் கட்டிக்கொடுக்காததால் ஆவேசம்! ஹோட்டல் ஓனரை சரமாரியாகச் சுட்ட வாலிபர்!

உத்தரப்பிரதேசத்தில், மக்கள் அதிகம் வந்துசெல்லும் உணவகம் ஒன்றில், கடையின் உரிமையாளரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு வெளியேறும் வீடியோ காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 


துப்பாக்கி

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில், பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. அதன் உரிமையாளர் லோக் ஆர்யா. மக்கள் அதிகம் வந்துசெல்லும் உணவகம் என்பதால், கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த வாரம், ஆர்யாவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். ஆர்யாவை சுடும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியில், `வெள்ளை நிறச் சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்த நபர் ஒருவர், சாதாரணமாக நடந்துவந்து, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கல்லாவில் அமர்ந்திருந்த ஆர்யாவிடம் பணம் கொடுப்பதுபோல, துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டுள்ளார். அந்த நபரைப் பிடிக்க, அங்கிருந்தவர்கள் முயன்றபோது, அவர்களைத் தள்ளிவிட்டு எதுவும் நடக்காததுபோல கூலாக அவர் உணவகத்தைவிட்டு வெளியேறுகிறார்’.   

இதையடுத்து, ஆர்யா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து, மூன்று பேரை போலீஸார் காவலில் விசாரித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தனியார் கட்டட ஒப்பந்ததாரர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னர், அந்த நபர் உணவகத்துக்கு வந்து உணவு பார்சல் கேட்டுள்ளார். பார்சல் கொடுக்க நேரமானதையடுத்து ஊழியருக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நாள்களுக்குப் பின்னர் தன் நண்பர்கள் இரண்டு பேருடன் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

 

 


அதிகம் படித்தவை