வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (30/07/2018)

கடைசி தொடர்பு:19:42 (30/07/2018)

அன்னா ஹசாரேவின் போராட்டமும்... ஆட்சி மாற்றங்களும்!

அன்னா ஹசாரே மீண்டும் தொடங்கயிருக்கும் உண்ணாவிரதம் குறித்த கட்டுரை...

அன்னா ஹசாரேவின் போராட்டமும்... ஆட்சி மாற்றங்களும்!

"இதோடு நம்முடைய போராட்டம் முடிந்துவிடவில்லை. இப்போதுதான் தொடங்குகிறது. `லோக்பால் மசோதா' வலுவானதாக நிறைவேறும்வரை நாம் போராட வேண்டும்" என்று 2011-ம் ஆண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தைத் தொடங்கி முழக்கமிட்டவர், சமூகப் போராளி அன்னா ஹசாரே. ``அவர் தொடங்கிவைத்த ஊழலுக்கு எதிரான போராட்டம் இப்போதும் தொடரும்வேளையில், அதைவைத்து அரசியல் மாற்றம் நிகழலாம்'' என்கின்றனர் அரசியல்வாதிகள்.

இந்தியாவில், நாளுக்குநாள் மலிந்துகொண்டிருக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 2011-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் அன்னா ஹசாரே. அப்போது, ``லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசுப் பிரதிநிதிகளுக்கு நிகராகச் சாமான்ய மக்களையும் பிரதிநிதிகளாகச் சேர்க்க வேண்டும்; அதுபோன்றதொரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்" என்பதே அன்னா ஹசாரேவின் வலியுறுத்தலாக இருந்தது. ஒருகட்டத்தில், ``ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காகக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை அப்போதைய மத்திய அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அன்னா ஹசாரே  உண்ணாவிரதத்தைக் முடித்துக்கொண்டார். 

இந்த நிலையில், ``ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும்; அதன் விசாரணை வரம்புக்குள் பிரதமர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரையும் சேர்க்க வேண்டும்" என்று அன்னா ஹசாரே மீண்டும் கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுத்துவிட்டது. பின்னர், அப்போதைய மத்திய அரசு தயாரித்த லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்தார் அன்னா ஹசாரே. அப்போது, விவசாயப் பிரச்னைகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்காதது பற்றி விவசாயிகள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, லோக்பால் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தியும் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்த அன்னா ஹசாரே, கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, ``மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு, கடந்த 4 ஆண்டுகளில் 43 கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால், எந்தக் கடிதத்துக்கும் பதில் கிட்டவில்லை. நாடு முழுவதும் விவசாயிகள் பேராபத்தில் உள்ளனர். அவர்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை'' என்றார்.

அன்னா ஹசாரே

``லோக்பால் அமைப்புக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்படுவார்'' என இப்போதைய மத்திய பி.ஜே.பி அரசு அறிவித்தபோதிலும், நீதிபதி நியமனம் செய்யப்படாமல் தாமதம் ஏற்பட்டுவந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது. மேலும், லோக்பால் நீதிபதி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு அன்னா ஹசாரேவும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். ``மத்தியில் இப்போதுள்ள பி.ஜே.பி அரசு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், ஊழலை ஒழிப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. லோக்பால் நீதிபதியை நியமிக்காமல் பல்வேறு காரணங்களைக் கூறி, மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள என்னுடைய சொந்த ஊரான ரலேகன்சித்தி கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன். ஊழல் இல்லாத இந்தியாவை விரும்பும் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே மீண்டும் தொடங்க இருப்பதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம். ``2011-ம் ஆண்டில் ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் அமைக்க வலியுறுத்தி அன்னா ஹசாரா உண்ணாவிரதம் இருந்தது, இந்தியாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே திரும்பிப்பார்க்கவைத்தது. அதன்படி, அப்போதைய மத்திய அரசும் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி அரசு, லோக்பால் அமைப்புக்கு நீதிபதியை அமைக்காமல் இருப்பதற்கு அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதேநேரத்தில் லோக்பால் சட்டமானது, பெயரளவுக்கு இல்லாமல் வலிமையானதாக இருக்க வேண்டும். 2011-ல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அவருடன் தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இப்போதைய புதுச்சேரி ஆளநர் கிரண்பேடி போன்ற ஆளுமைகள் பலரும் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் தற்போது வேறு தளத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அரவிந்த் கெஜ்வாலின், ஆம் ஆத்மி கட்சி உருவானதே, அன்னா ஹசாரே போராட்டத்தை அடியொற்றித்தான் என்றே கூறவேண்டும். தற்போது, டெல்லியில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி திகழ்வதுடன், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தங்களின் பங்களிப்பை அக்கட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.

தவிர, 2011-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரான அலை பரவலாக இருந்ததையும் நினைவில்கொள்ள வேண்டும். அந்தவகையில் அன்னா ஹசாரேயின் அப்போதைய உண்ணாவிரதப் போராட்டம், நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான ஒரு விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த பெரிதும் காரணமாக அமைந்தது. அதுவே, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.-க்குச் சாதகமாக அமைந்ததையும் மறுக்க முடியாது. பின்னர், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோற்பதற்கும் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் முக்கியக் காரணமாயிற்று. ஆனால், தற்போது பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்து நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் வகையிலும், மக்களிடையே லோக்பால் சட்டம் தொடர்பான புரிதலை உருவாக்கும் வகையிலும் அன்னா ஹசாரே இப்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

அவரின் இந்தப் போராட்டம், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மற்றும் தேசிய அளவில் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிகளுக்குச் சாதகமாக அமையுமா அல்லது பாதகத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் மறுஅவதாரம், மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதும் போகப்போகத்தான் தெரியும்'' என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள் மிகத் தெளிவாக. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்