வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (31/07/2018)

கடைசி தொடர்பு:10:23 (31/07/2018)

அதிக கடத்தல் வழக்குகள் பதிவான கட்சிகளின் பட்டியல்- முதல் இடம் பிடித்த கட்சி?

இந்திய அளவில் உள்ள அனைத்துக் கட்சிகளில், அதிக கடத்தல் வழக்குகள் பதிவான கட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கட்சி

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக கடத்தல் வழக்குகள் பதிவான கட்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 770 எம்.பி மற்றும் 4,086 எம்.எல்.ஏ-க்களில்1,024 பேர் அதாவது, 21 சதவிகிதத்தினருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 64 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி முதலிடம் பிடித்துள்ளது. பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 6 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. தொடர்ந்து, பிஜு ஜனதா தளம், தி.மு.க, சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திரிணமுல் காங்கிரஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

மேலும், எம்.எல்.ஏ-க்கள்மீது அதிக குற்ற வழக்குகள் பதிவான மாநிலங்கள் என்ற அடிப்படையில், பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ-க்கள்மீது 9 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 8 வழக்குகளும்  மேற்கு வங்க எம்.எல்.ஏ-க்கள் மீது 7 வழக்குகளும் ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது நான்கு வழக்குகளும் ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது மூன்று வழக்குகள் வீதம் பதிவாகியுள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.