பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை! - சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் | death penalty for child rape convicts bill passed in Lok Sabha

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (31/07/2018)

கடைசி தொடர்பு:10:40 (31/07/2018)

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை! - சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

12 வயதுக்குக் குறைவாக உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

பாலியல் வன்கொடுமை

தற்போதுள்ள காலங்களில், சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவர் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் வெகுவாக அதிகரித்துவருகின்றன. எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை என்ற நிலைக்கு தற்போதுள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவைக் கடந்த 23-ம் தேதி மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்செய்தார். 

இதையடுத்து, நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்புக்குப் பின்னர் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைசெய்யும் குற்றவாளிக்கு, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனையும் அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, குறைந்த பட்சமாக ஆயுள் தண்டனையும் அதிகபட்சமாக மரண தண்டையும் விதிக்கப்படும். 

மேலும், 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால், குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டையும் விதிக்கப்படும். அதுவே, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.