ஆட்டோ ஓட்டுநர் மகன்... அசாம் வீராங்கனை... 46வது மான் கி பாத் ஹைலைட்ஸ்! | Highlights of maan ki baat

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (31/07/2018)

கடைசி தொடர்பு:11:04 (31/07/2018)

ஆட்டோ ஓட்டுநர் மகன்... அசாம் வீராங்கனை... 46வது மான் கி பாத் ஹைலைட்ஸ்!

நம் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றத்தில் இருந்து மாதம் ஒருமுறை “மான் கி பாத்'' நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானோலி மூலம் உரையாற்றுவார். இதன் 46வது நிகழ்ச்சி இந்த ஜூலை 29 அன்று ஒளிபரப்பானது.

ஆட்டோ ஓட்டுநர் மகன்... அசாம் வீராங்கனை... 46வது மான் கி பாத் ஹைலைட்ஸ்!

நம் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றத்திலிருந்து மாதம் ஒருமுறை ``மான் கி பாத்'' நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானோலியில் உரையாற்றுவார். இதன் 46 வது நிகழ்ச்சி இந்த ஜூலை 29 அன்று ஒளிபரப்பானது. முப்பது நிமிட உரையானது இந்த முறை தாய்லாந்து குகை சம்பவத்திலிருந்து தொடங்கியது. இயற்கைக்கும் மனிதருக்கும் இடையில் சில நேரங்களில் நெருடல்கள் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணமாக இயற்கை நமக்கு எதிரான நிலைப்பாட்டில் நிற்க நேர்கிறது. சில மணி நேரத்தில் சுற்றிப் பார்க்கக் கூடிய குகைக்குள் 12 கால்பந்து வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் 18 நாள்கள் சிக்கிவிட்டனர். ஆனால் அவர்களை மீட்கும் முயற்சியில் எல்லா தரப்பட்ட மக்களும் இணைந்து பதற்றமின்றி ஒரே இலக்குடன் நிதானமாகச் செயல்பட்டது பாரட்டுக்குரியது என்றார். மக்களுக்கு எழுச்சியூட்டும் கவிதைகளை விட்டுச்சென்ற நீரஜ் ஜி இழப்புக்கு வருத்தம் தெரிவித்த மோடி, டெல்லி மாணவர் கேள்விக்கு பதிலளிக்க துவங்கினார்.

கல்லூரி சேரும் மாணவர்களுக்கு அறிவுரை:

ஏப்ரல் - மே மாதங்களில் கடுமையாகப் படித்துத் தேர்வுகளை எதிர்கொண்டு மீண்ட மாணவர்கள் தற்போது கட்-ஆப் மதிப்பெண்ணோடு  கல்லூரிகளை எதிர்கொண்டு வருவர். ஜூலை - ஆகஸ்ட் என்பது விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் முக்கியமான மாதங்கள். கேள்வித்தாளிலிருந்து கட் ஆஃப்பிற்கும் வீட்டிலிருந்து விடுதிக்கும் மாறும் நேரம் இது. பெற்றோர்கள் நிழலிலிருந்து ஆசிரியர்கள் நிழலுக்கு மாறும் தருணம் இது. நீங்கள் நீங்களாக இருங்க முயலுங்கள். நிதானமாக இருங்கள். வாழ்வை அனுபவியுங்கள். உங்கள் உள் அமைதி நிலையைக் கொண்டாட முயலுங்கள். இதுவரை இருந்த நண்பர்கள் பெரும்மதிப்பிற்கு உரியவர்கள். இனி நீங்கள் புதிய நட்புகளை தேடப்போகிறீர்கள். புது மொழி, புது கலைகளை கற்றுக்கொள்ளுங்கள். பெற்றோரை விட்டு தொலைதூரம் சென்று படிக்கும் மாணவர்கள் புது இடங்களை சுற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளுங்கள் என்று பேசினார்.

மான் கி பாத்

சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துகள்:

சமீபச் செய்திகளில் உலா வந்த உத்திரப்பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த குப்பை சேகரிக்கும் தொழிலாளியின் மகன் ஆஷாராம் சவுத்ரி நீட் தேர்வில் தன் முதல் முயற்சியிலேயே ஜோத்புர் எய்ம்ஸ் கல்லூரியில் இடம்பெற்றுள்ளார். 

தில்லி அரசுப் பேருந்து ஓட்டுநர் மகன் பிரின்ஸ் குமார், ஹரியானா காவலாளியின் மகன் கார்த்தி, ஜார்கண்ட் செங்கல் சூளைத் தொழிலாளியின் மகன் ரமேஷ் சாகு, அகமதாபாத் ஆட்டோ ஓட்டுநர் மகன் அப்ரின் சேக், நாக்பூர் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் மகள் குஷி எல்லாம் கடுமையாகப் படித்து தேர்வுகளில் சாதனை படைத்துள்ளனர்.

கொல்கத்தா சாலையோரத் தெருவிளக்கில் படித்த அபை குப்தா, சிறு வயதிலேயே முதுகெலும்பு தசைக் கோளாறால் பாதிக்கப்பட்ட அனுஷ்கா பாண்டா, சுயமாக பொம்மை விற்று படித்த ரமேஷ் எல்லாம் இன்று தன் முயற்சியில் சாதனை புரிந்து நின்றுள்ளனர்.

அசாம் ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஹிமா தாஸ் பின்லாந்தில் நடந்த 20 வயத்திற்குட்பட்டவருக்கான உலக சம்பியன்ஷிப் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.

துனிஷியாவில் நிகழ்ந்த உலக அளவிலான பாரா அத்லெடிக்ஸ் கிராண்ட் ப்ரிக்ஸ் 2018 ல் தங்கம், வெண்கலம் எனப் பதக்கங்கள் வென்ற எக்டா பையான், வட்டெறிதலில் தங்கம் வென்ற யோகேஷ் கத்துனியா , ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜர் அனைவருக்கும் என் பாராட்டுகள். 

ஸ்மார்ட் அரசு:

அமெரிக்கா சான் ஜோஸ் க்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்தியா இளைஞர்கள் தொழில்நுட்பத்துறையில் சாதித்து வருவது கண்டேன். ரேபரேலியில் வசித்து வரும் யோகேஷ் சாகு, ரஜினிஷ் பாஜ்பாய் இருவரிடமும் இந்திய கிராமங்கள் தொழில்நுட்பத்தில் மேம்பட உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அதற்காக அவர்கள் ஸ்மார்ட் காவ்ன் (smart goan) என்ற செயலியை உருவாக்கித் தந்துள்ளனர். இதன் மூலம் கிராமப்புற மக்கள் எல்லா விதமான அரசின் செய்திகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விழிப்புஉணர்வு கிராமங்களில் கொடுக்கப்படுகிறது என்றார் பிரதமர்.

திலகர், சந்திரசேகர் நினைவுகூர்வு:

``சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்” என்று முழங்கிய திலகர் வாக்கை நம் அனைவருக்கும் கிடைத்திட வழி செய்வேன். சுதந்திரத்துடன் நல்லாட்சி கிடைத்திடவும் வழி செய்வேன். அவர் பிறந்து 50 ஆண்களுக்குப் பின் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் உயிர் துறந்த சந்திரசேகர் ஆசாத் அவர்களையும் நினைவு கூர்ந்தார்.

சூழல் சதுர்த்தி:

ஆகஸ்ட் மாதம் திருவிழாக்கள் நிறைந்த மாதம். இந்த மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியைச் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்காமல் இயற்கையோடு ஒன்றும் பொருள்களால் செய்த விநாயருடன் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பண்டிகைகளோடு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று கூறி தன் உரையை முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்