`என் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது!' - யு.எஸ்-ஸிலிருந்து புதுமாப்பிள்ளை கோரிக்கை; சுஷ்மா அதிரடி

இந்தியாவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அமெரிக்காவில் தன் பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியுள்ளார். 

சுஷ்மா ஸ்வராஜ்

அமெரிக்காவில் பணிபுரியும், இந்தியாவைச் சேர்ந்த தேவதா ரவி தேஜா என்பவருக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி  இந்தியாவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே, தேவதா ரவி தேஜா, தன்னுடைய பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் தொலைத்துவிட்டார். இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, அந்த வாலிபர் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ``என்னுடைய திருமணம் ஆகஸ்ட் 13-ம் தேதி நடக்கவிருக்கிறது. தற்போது  என்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டேன், ஆகஸ்ட் 10-ம் தேதி நான் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும். தயவுசெய்து, நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்''  என்று கோரிக்கை விடுத்தார். 

உடனடியாக சுஷ்மா ஸ்வராஜ், ``உங்கள் பாஸ்போர்ட்டை தவறான நேரத்தில் தொலைத்துவிட்டீர்கள். திருமண நேரத்துக்குச் செல்ல கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன்'' எனப் பதிலளித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நவ்தேஜ் சர்னாவிடம் பேசிய சுஸ்மா, பாஸ்போர்ட்டை தொலைத்த  தேவதா ரவி தேஜாவுக்கு மனிதாபிமான அடிப்படையில்  உதவும்படி உத்தரவிட்டார். இதற்காக சுஷ்மா ஸ்வராஜுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் தேவதா ரவி தேஜா. சுஷ்மா ஸ்வராஜின் இந்த உடனடி நடவடிக்கைக்குப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!