`ராஜீவ் காந்திக்குத் தைரியமில்லை; நாங்கள் செய்தோம்!’ - சர்ச்சையைக் கிளப்பிய அமித் ஷா

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக நடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றதால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அமித்ஷா

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் விதமாக அம்மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரித்து வந்தது. இதன்மூலம் வங்கதேச மக்களை எளிதாக அடையாளம் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அணைத்து மக்களின் ஆவணங்களையும் சரிபார்த்து பட்டியல் தயார் செய்தது. இதன்படி முன்னதாக வெளியான இதன் வரைவு பட்டியலில் பல சிக்கல் எழுந்தது. அவை அனைத்தையும் சரி செய்யும் பணியில் அசாம் மாநில அரசு ஈடுபட்டிருந்தது. இதையடுத்து, இதன் அடுத்த வரைவுப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்த நிலையில் 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இந்நிலையில், அசாம் விவகாரம் தொடர்பாக நேற்று முதல் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவையில் இன்றைய விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி-யும் அக்கட்சியின் தேசியத் தலைவருமான அமித் ஷா, “அசாம் மக்களின் குடியுரிமை தொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கையெழுத்திட்டார். ஆனால், அதை நிறைவேற்ற அவர்களுக்குத் தைரியமில்லை. தற்போது நாங்கள் அதைச் செய்துள்ளோம்” எனக் கூறினார். இவரின் பேச்சுக்குப் பிறகு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸார் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே முற்றிலும் பரபரப்பாகக் காணப்பட்டது. காங்கிரஸாரை அமைதிப்படுத்த மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. காங்கிரஸாரின் அமளியால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!