கொழும்பன் கண்ட குறவன் குறத்தி மலை... இடுக்கி `பீமன்' அணை உருவான வரலாறு! | idukki dam opened high alert in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (31/07/2018)

கடைசி தொடர்பு:20:20 (31/07/2018)

கொழும்பன் கண்ட குறவன் குறத்தி மலை... இடுக்கி `பீமன்' அணை உருவான வரலாறு!

இடுக்கி அணை இன்றோ அல்லது நாளையோ திறக்கப்படலாம்.

கேரளாவில் மேலும் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில்138 அடி நீர் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். மழை நீடிப்பதால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் பெரியாற்றில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த ஆர்ச் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். முல்லைப் பெரியாறு அணையைவிட இடுக்கி அணை 7 மடங்கு பெரியது.  

இடுக்கி அணை

Pic courtesy: Idukki dam facebook page

ஆர்ச் அணை 170 மீட்டர் உயரமும் 366 மீட்டர் நீளமும் கொண்டது. கேரள மின்வாரியத்துக்குச் சொந்தமான இந்த அணை 780 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இங்கே 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையும் உள்ளது. அருகிலுள்ள இரட்டையார் அணைக்கட்டில் இருந்து சுரங்கப்பாதை வழியாக இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பெரியாற்றில் கட்டப்பட்டுள்ள ஆர்ச் அணை, செருதோனி ஆற்றில் கட்டப்பட்டுள்ள செருதோனி அணை, குலமாவு ஆற்றுப் பகுதியில் கட்டப்பட்ட மூன்று அணைகள் சேர்ந்தே இடுக்கி அணை என்று அழைக்கப்படுகிறது. குறவன், குறத்தி என்ற இரு மலைகளுக்கிடையே ஓடிய பெரியாற்றை தடுத்து பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இடுக்கி அணையில் ஷட்டர்கள் கிடையாது. 

இந்த அணையின் மொத்த கொள்ளவு 2,403 அடி. அணையில் நீர் 2,390 அடியை எட்டியதும் க்ரீன் அலெர்ட், 2,395 அடியை எட்டியதும் ஆரஞ்ச் அலெர்ட், 2,397 அடியை எட்டியதும் ரெட் அலெர்ட் விடப்படும். ரெட் அலெர்ட் விடப்பட்ட 24 மணி நேரத்தில் செருதோனி பகுதியில் உள்ள ஐந்து மதகுகளின் மத்தியில் உள்ள மதகு முதலில் திறக்கப்படும். தொடர்ந்து பக்கவாட்டில் உள்ள பிற மதகுகளும் திறக்கப்படும். 40 செ.மீட்டர் உயரம் மட்டுமே மதகுகள் திறக்கப்படும். விநாடிக்கு 1,750 கன அடி நீர் வெளியேற்றப்படும். செருதோனியில் திறக்கப்படும் தண்ணீர் அடுத்த 90 நிமிடங்களில் லோயர் பெரியாறு அணையை எட்டும். தொடர்ந்து காலடி, பெரும்பாவூர், நெடும்பாஞ்சேரி, ஆலுவா வழியாக அரபிக்கடலில் நீர் கலக்கும். இதற்கு முன், 1981 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. 

``இடுக்கி அணை நிரம்பி வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்''  என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையெ பெரியாற்றில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறுபவர்கள் கைது நடவடிக்கைக்குள்ளாவார்கள். 

இடுக்கி அணை

இடுக்கி அணை கட்டப்பட்டதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மலங்கரா எஸ்டேட்டுக்கு ஆங்கிலேய அதிகாரி தாமஸ் என்பவர் வந்துள்ளார். ஆதிவாசி மக்கள் தலைவர் கொழும்பன் என்பவர் குறவன், குறத்தி மலைகளுக்கிடையே ஓடிய பெரியாற்றை அவரிடம் காட்டியுள்ளார். தாமசுக்குதான் முதலில் இந்த இடத்தில் அணை கட்டலாம் என்கிற ஐடியா உதித்துள்ளது.

பின்னர், டபிள்யூ. ஜே. ஜாண் என்பவர் இந்தப் பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து ஆர்ச் அணை கட்டலாம் என்று திருவாங்கூர் அரசுக்கு அறிக்கை அளித்தார். இந்தியா சுதந்திரமடைந்த பின் 1969-ம் ஆண்டு ஆர்ச் அணை கட்டுமானப்பணி தொடங்கியது. இடுக்கி அணை கட்டப்பட காரணமாக இருந்த கொழும்பன் குடும்பத்தினருக்கு இப்போதும் அணை திறக்கப்படும்போது, முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இடுக்கி அணை திறக்கப்படும் போதும், கொழும்பன் குடும்பத்தினர் சிறப்பு பூஜை செய்வார்கள். அதற்கு பிறகே இடுக்கி அணை திறக்கப்படும். இந்த முறை, கொழும்பனின் கொள்ளுப் பேரன் பாஸ்கரன் என்பவர் சிறப்புப் பூஜை நடத்துகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க