வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (31/07/2018)

கடைசி தொடர்பு:22:20 (31/07/2018)

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேறியது.

பாலியல் மசோதா

நாடு முழுவதும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில், இம்மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. மேலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால், அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கவும், குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தவிர்க்கவும் இம்மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த முதல் 2 மாதத்துக்குள் விசாரணை நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட புதிய அம்சங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. மக்களவையில் நிறைவேறிய இம்மசோதா, அடுத்தகட்டமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.