மல்லையாவுக்குப் பிடித்தமாதிரி டாய்லெட் வசதி தரப்படும்! லண்டன் நீதிமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையா இன்று லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற மல்லையாவை இந்தியாவில் போதுமான வசதிகளற்ற, சுகாதாரச்சீர்கேடான சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எனவே மல்லையா அடைக்கப்பட வாய்ப்புள்ள மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் புகைப்படங்களை இந்திய அரசு நீதிபதியிடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த புகைப்படங்கள் தெளிவாக இல்லை. சிறையின் உட்புறத்தைத் தெளிவாக காட்டும் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினமும் மல்லையா தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

மல்லையா

இவ்விசாரணையின்போது இந்திய அரசின் சார்பாக, மல்லையாவை அடைக்கவுள்ள மும்பை சிறைச்சாலையில் மல்லையாவுக்கு மற்ற கைதிகளின் இடையூறுகளற்ற தனிதத பாதுகாப்பு வழங்கப்படுமென்றும், இவருக்கென தனிச்சுற்றுச்சுவருடன் கூடிய அறை உருவாக்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டது. மேலும், இவருக்காக ஐந்துவித வெஸ்டர்ன் டாய்லெட் புகைப்படங்களைக்காட்டி, அதில் தேர்வு செய்யப்படும் ஒரு டாய்லெட் வடிவமைப்பை அவரது சிறையறையில் பொருத்தித்தருவோம் என்றும், அவருக்காக தூய்மையும், சுகாதாரமும் ஒருங்கமைந்த சிறைச்சாலை அமைத்துத் தரப்படும் என்றும் நீதிமன்றத்திடம் எடுத்துக்கூறி நீதிமன்றத்தை சமாதானப்படுத்த முயற்சித்தது. ஆக, மல்லையா இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் இந்தியாவிலுள்ள சிறையில் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாகத்தான் வாழப்போகிறார் என்பது உறுதி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!