வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (01/08/2018)

கடைசி தொடர்பு:10:15 (01/08/2018)

`சமூக நலத் திட்டங்களுக்கு இனி ஆதார் அவசியமில்லை' - கெஜ்ரிவால் அதிரடி!

ஆதார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவையில், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு தேவையில்லை எனும் முன்மொழிதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் டெல்லியில் விதவை, மாற்றுத்திறனாளர் மற்றும் முதியவர் ஓய்வூதியங்கள் பெறுவதற்கு, இனி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன்  இணைக்கத்  தேவையில்லை. 

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதில் வங்கிகளின் இயலாமையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விதவை, முதியோர் ஓய்வூதியங்களுக்கு ஆதார் இணைப்பு அவசியமில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனப் பதிவு செய்துள்ளார். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் 33,191 ஓய்வூதியப் பயனாளர்களும், 9,799 மாற்றுத்திறனாளி பயனாளர்களும் உயர்த்தப்பட்ட ஓய்வூதியங்களைப் பெற முடியாமல் இருந்தனர். தற்போது, சமூக நலத்துறை ஆதாரினால் நின்றுபோன தொகையை மறுபடியும் வழங்கும் எனக் கூறியுள்ளது. கடந்த 2016 முதலே டெல்லி அரசு ஆதார்குறித்து கெடுபிடியாக இல்லாமல் தளர்வாகவே செயல்பட்டுவருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஆதார் உச்ச நீதிமன்றக் கேள்விகளும் தீர்ப்பும்தான், அமைச்சரவையில் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

 

டெல்லி சமூக நலத்துறை 60-69 வயதுடைய முதியவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் ஓய்வூதியமும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2,500 ரூபாய் ஓய்வூதியமும் வழங்குகிறது. இதைப் பெறுவதற்கு முதியவர்கள் குறைந்தது 5 வருடங்கள் டெல்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும். அவரது குடும்ப வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம் ரூ.2,500 வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.