வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (01/08/2018)

கடைசி தொடர்பு:10:16 (01/08/2018)

உத்தரப்பிரதேசத்தில் விடாது பெய்யும் கன மழையால் 12 பேர் பலி..!

மழை

கடந்த சில வாரங்களாகவே வட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், பல்வேறு சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மழையினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் முழுவதும் இதுவரை மழையினால் இறந்தவர்களின் பலி எண்ணிக்கை 92 ஆகவும், காயமுற்றவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. 59 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 600 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவ அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கான்பூர், ஹத்ராஸ், சித்தரகோட், அலகாபாத், மதுரா, அமேதி, ஃபதேபூர் ஆகிய இடங்களில் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.மழையின் அளவு அதிகமாக இருந்ததும், முன்கூட்டியே கணித்து சரியான பாதுகாப்புத் திட்டங்களை வகுக்காததுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் மக்கள்.

இரண்டு நாள்களுக்கு முன்புதான் டெல்லியில், யமுனையில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்களை அப்பகுதியிலிருந்து காலிசெய்துள்ளது அந்த அரசு. கேரளாவிலும் கனமழை பாதித்திருக்கிறது.