வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (01/08/2018)

கடைசி தொடர்பு:12:20 (01/08/2018)

26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் இடுக்கி அணை: கரையோர மக்கள் வெளியேற்றம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணை, தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு அணை திறக்கப்பட உள்ளது. இதனால், கரையோர மக்களை வெளியேறும்படி மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 இரு மலைகளுக்கு இடையில் ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இடுக்கி அணை, செருதாணி, குலமாவு என இரு அணைகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இடுக்கி அணைதான் ஆசியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவ அணை என்பது சிறப்பு. அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரைக்கொண்டு, மூலமட்டம் என்ற இடத்தில் 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தீவிர மழை காரணமாக, அணையின் மொத்தக் கொள்ளளவான 2, 403 அடியில் தற்போது, 2,395 அடியைக் கடந்துவிட்டது. 2,400 அடியை எட்டும் பட்சத்தில், செருதாணி அணை மதகு வழியாகத் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேரள மின்சார வாரியம், அணைக்குக் கீழ் உள்ள பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறப்பதால், பல கட்டடங்கள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இரு நாள்களில், 2,400அடியை நீர்மட்டம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சூழலில், அபாய சங்கொலி எழுப்பப்பட்டு, அடுத்த 15-வது நிமிடம் அணை திறக்கப்படும் எனவும் மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது, சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணை திறக்கும்போது புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியில்லை, பத்திரிகையாளர்களுக்கும் அனுமதியில்லை என அணை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோர மக்கள் அச்சப்பட தேவையில்லை. மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்கும்” எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.