வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (01/08/2018)

கடைசி தொடர்பு:11:55 (01/08/2018)

குமாரசாமிக்கு புதிய தலைவலி... வட கர்நாடகா பிரியத் துடிக்கும் காரணம் என்ன?

ர்நாடக மாநிலத்தில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. வட கர்நாடகப் பகுதி புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அதைத் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி, நாளை 13 மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட கர்நாடகா கொடி

வட கர்நாடகப் பகுதியில் பெலகாவி (பெல்காம்), தார்வாட், ஹவேரி, பெல்லாரி, கடக் , கொப்பலா, பாகல்கோட், பீஜப்பூர், ரெய்ச்சூர், விஜயபுரா, யாத்கிரி, கல்புருகி, பீடார் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன. ஜூலை 5-ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில், வட கர்நாடக மாவட்டங்களை முதல்வர் குமாரசாமி புறக்கணித்துவிட்டதாக, வட கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் குற்றம் சாட்டின.  குமாரசாமியைக் கண்டிக்கும் வகையில், நாளை பெலகாவியில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, வட கர்நாடகத்துக்கு என்று தனியாக  கொடி அறிவிக்கப்பட உள்ளது. 

'பாரதிய ஜனதா கட்சி தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கப்போவதில்லை' என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில், வட கர்நாடகத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் பெலகாவியில் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா, ''வட கர்நாடகத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுவதற்கு குமாரசாமிதான் முக்கியக் காரணம்'' என்றார்.

முதல்வர் குமாரசாமி, ''பெலகாவியை கர்நாடகத்தில் இரண்டாவது தலைநகராக மாற்றுவேன் என்று அறிவித்தேன். அதற்கேற்ற வகையில் திட்டங்களை அறிவிப்பேன். சுவர்ண சவுதானுக்கு சில அமைச்சகங்களை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். வட கர்நாடகம் பெருமைமிக்க பகுதி. நம் முன்னோர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து கர்நாடக மாநிலத்தை ஒருங்கிணைத்தனர். கர்நாடகத்தைப் பிரிக்க ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்'' என்று பதிலடிகொடுத்துள்ளார். 

வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்குப் புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். பெங்களூருவில் உள்ள விதான் சவுதான் போல பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதான் செயல்பட வேண்டும். சுவர்ண சவுதானில் இருந்து சில முக்கிய அமைச்சகங்கள் செயல்பட வேண்டுமென்றும், வட கர்நாடகப் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால், போராட்டம் தீவிரமடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீராமுலு , தனி மாநிலம் போராட்டத்தை முன்னின்று நடத்தத் தயார்' என்று அறிவித்தார். ஸ்ரீராமுலுவின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

வட கர்காடகா

வட கர்காடகப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பீமாப்பா கடாட், ''கடந்த 40 ஆண்டுகளாக வட கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தென் கர்நாடகத்துக்கு மட்டுமே வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்தது போல, வட கர்நாடக மாநிலம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்று கூறுகிறார். 

சுதந்திரத்துக்கு முன் மைசூரு நகரம்தான் கர்நாடகத்துக்கு தலைநகராக இருந்தது. 1930-ம் ஆண்டு அல்லுர் வெங்கட்ராம ராவ் என்ற சமூக ஆர்வலர் எடுத்த முன்னெடுப்பால்,  கன்னட  மொழி பேசும் மக்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளும் ஒருங்கிணைந்து, ஒரே மாநிலம் ஆகின. வட கர்நாடகத்தில் சில மாவட்டங்கள் பம்பாய் பிரெசிடென்சியிலும் சில ஹைதராபாத் நிஜாம் ஆட்சியிலும் இருந்தன. 1956-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உதித்தபோது, வட கர்நாடகப் பகுதியும் இணைக்கப்பட்டது. வட கர்நாடகம் கடும் வெப்பம் நிலவும், தண்ணீர் தட்டுப்பாடுடைய பகுதி ஆகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க