ரோஹிங்யா அகதிகளைக் கணக்கிட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

நாடு முழுவதும் உள்ள ரோஹிங்யா அகதிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ரோஹிங்யா

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் விதமாக அம்மாநில அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரித்து வந்தது. இதன் மூலம் வங்கதேச மக்களை எளிதாக அடையாளம் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனைத்து மக்களின் ஆவணங்களையும் சரிபார்த்து பட்டியல் தயார் செய்தது. இதன்படி முன்னதாக வெளியான வரைவு பட்டியலில் பல சிக்கல்கள் எழுந்தன. அவை அனைத்தையும் சரிசெய்து அதன் அடுத்த வரைவுப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதற்கு 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்த நிலையில் 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் வெளியேற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘மியான்மரிலிருந்து இந்தியா வந்துள்ள ரோஹிங்யா மக்களை அகதிகளாகக் கருத முடியாது. அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே மத்திய அரசு கருதுகிறது. அப்படி குடியேறியவர்கள் பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன. எனவே, அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!