ஹனானின் புன்னகை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது - பினராயி விஜயன் | Kerala Chief Minister met the student Hanan

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (01/08/2018)

கடைசி தொடர்பு:16:20 (01/08/2018)

ஹனானின் புன்னகை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது - பினராயி விஜயன்

``அரசின் ஆதரவும் பாதுகாப்பும் ஹனானுக்கு எப்போதும் உண்டு" என மீன் விற்ற கல்லூரி மாணவியைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஹனான்

திருச்சூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான் கொச்சியில் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். டாக்டர் ஆகும் கனவில் தொடுபுழாவில் ஒரு கல்லூரியில் வேதியியல் படித்து வருகிறார். குடும்ப வறுமையைப் போக்கவும் படிப்புச் செலவுக்காகவும் காலையில் கல்லூரி சென்றுவிட்டு மாலையில் மீன் விற்கும் தொழில் செய்துவருகிறார். ஹனானின் இந்த முயற்சிக்குத் தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. ஹனான் டி.வி-க்களில் சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். இதை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி தனது அடுத்த தயாரிப்பான `21-ம் நூற்றாண்டு' என்ற படத்தில் ஹனானுக்கு நல்ல கதாபாத்திரம் அளிக்க முன்வந்தார். இதைத் தொடர்ந்து பட வாய்ப்புக்காகத் தன் துயரக்கதையை வெளியே கூறியதாகச் சமூக வலைதளவாசிகள் ஹனான்மீது பாய்ந்தனர். இதைத் தொடர்ந்து ஹனானுக்கு ஆதரவாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவி ஹனானை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சந்தித்தார்.

ஹனான்

ஹனானை சந்தித்த புகைப்படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பினராயி விஜயன். மேலும் அந்தப் பதிவில், ``அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் ஹனாக்ச் சந்தித்தேன். ஹனானின் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்வதற்காகவும் படிக்கவும் வியாபாரம் செய்வதால் சைபர் தாக்குதலுக்கு ஆளானவர் ஹனான். அன்று அவருக்கு எல்லாவிதமான பாதுகாப்பையும் உறுதிசெய்தது அரசு. இதையடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் ஹனான் வந்திருந்தார். அரசின் ஆதரவும் பாதுகாப்பும் ஹனானுக்கு எப்போதும் உண்டு எனக் கூறி அனுப்பினேன். இதுகுறித்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். மிகுந்த தைரியத்துடன் முன்னேறு என்று ஹனானிடம் தெரிவித்தேன்" எனக் கூறப்பட்டிருந்தது.