2,000 பேர் பார்த்த ஃபேஸ்புக் லைவ் தற்கொலை! - ஒருவர்கூட போலீஸூக்கு தகவல் தெரிவிக்காத கொடுமை

ஹரியானாவில், ஃபேஸ்புக் லைவ் மூலம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதை 2000 பேர் பார்த்துள்ளனர். ஆனால், ஒருவர் கூட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 

பேஸ்புக் தற்கொலை

ஹரியானாவில் பட்டோடி என்ற கிராமத்தில் வசிப்பவர் அமித் சௌஹான். குடும்பத் தகராறில் இவரின் மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்தத் துக்கம் தாங்காமல் அமித் ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ‘ கடந்த திங்கள்கிழமை இரவு 7 மணியளவில், அமித்தின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்தச் சோகத்தில், அடுத்த சில நிமிடங்களில் ஃபேஸ்புக் லைவ் செய்த அமித், தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும், அதை அனைவரும் ஷேர் செய்ய வேண்டும் எனவும் கூறியபடியே, அடுத்த ஒரு மணிநேரத்தில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இந்த ஃபேஸ்புக் லைவை சுமார் 2000 பேர் பார்த்துள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை 10 மணிக்கு, யாரோ ஒருவர் போன் செய்து இந்தத் தகவலைத் தெரிவித்தார். நாங்கள் இடத்தைத் தேடி கண்டுபிடித்து வருவதுக்குள் இறந்தவரின் வீட்டார் அவருக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டனர். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது” என அதிகாரிகள் தெரிவித்தனர். அமித்தின் தற்கொலை தொடர்பாக, அவரின் குடும்பத்தாரும் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கவில்லை. 

மேலும், தற்கொலை குறித்துப் பேசிய அமித்தின் தந்தை அஷோக் சௌஹான், “என் மருமகள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் அமித் தன் அறைகளை விட்டு வெளியே வரவில்லை. சுமார் ஒன்பது மணிக்கு அமித்தின் அம்மா இரவு உணவுக்காக அவனை அழைக்க அறையின் கதவைத் திறக்கும்போது, அவன் இறந்துகிடந்தான். அது மட்டுமல்லாது, அமித்துக்கு சில காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்றுவந்தான். தன் மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் என அனைவரிடமும் தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பான். அவன் நடத்தை எனக்கு முற்றிலும் பிடிக்காததால், நான் அவனிடம் பேசுவதையே சில நாள்களாக நிறுத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!