வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (01/08/2018)

கடைசி தொடர்பு:15:33 (01/08/2018)

225 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி - இரவு, பகலாக நடக்கும் மீட்புப்பணி

பீகாரில் 225 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பிஹார்

பீகார் மாநிலம் முங்கர் பகுதியில் நேற்று சனா என்ற 3 வயது குழந்தை வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அதே பகுதியில் 225 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு, பணிகள் முற்றிலும் நிறைவடையாமல் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் சிறுமி அந்தக் குழியில் தவறி விழுந்துள்ளார். 225 அடி ஆழமுள்ள கிணற்றில் 110-வது அடியில் சிறுமி சிக்கியுள்ளார். 

பிஹார்

இதையறிந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுமியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்புப் பணிகள் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிஹார்

குழியினுள் சிறுமி மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழியினுள் ஆக்சிஜன் டியூப்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்கள், வெளிச்சத்துக்கு லைட் போன்றவை குழிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய டி.ஐ.ஜி ஜிதேந்திரா மிஸ்ரா, `` மாநிலத்தின் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இதுவரை 40 அடி ஆழம் வரை பெரிய குழி தோண்டியுள்ளோம். சிறுமி நலமாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.