வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (01/08/2018)

கடைசி தொடர்பு:18:20 (01/08/2018)

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் உயர்த்தியதன் பின் பங்குகள் சரிவு 01-08-2018

சமீப தினங்களில் தொடர்ந்து புது உச்சங்களைத் தொட்டு பாசிட்டிவாக முடிந்த இந்திய பங்குச் சந்தை இன்று நஷ்டத்தில் முடிவுற்றது. 

ரெப்போ விகித உயர்வு, ப்ராபிட் புக்கிங் மற்றும் சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட தொய்வு நிலை இவை யாவும் சந்தையின் இன்றைய பலவீனமான முடிவுக்கு காரணமாயின.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 37,711.87 என்று ஒரு புதிய உயரத்தைத் தொட்டாலும், இறுதியில் 84.96 புள்ளிகள் அதாவது 0.23 சதவிகித நஷ்டத்துடன் 37,521.62 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 11,390.55 என்ற புதிய உச்சத்தைத் தொட்டபின் 10.30 புள்ளிகள் அதாவது 0.09 சதவிகித நஷ்டத்துடன் 11,346.20-ல் முடிந்தது.

 

சீன பொருளாதாரம் பற்றிய சில அறிக்கைகள் சிறப்பாக அமையாததாலும், அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலருக்கு மேலான பொருள்கள் மீது அதிக அளவிலான வரியை விதிக்க எண்ணியுள்ளது என்ற செய்தியினாலும் ஆசிய சந்தைகள் இன்று பெரும்பாலும் நஷ்டத்தில் முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகளும், இதன் காரணமாகவே மந்த கதியில் இன்று வர்த்தகத்தைத் துவங்கின. மேலும், இன்று வெளிவர இருக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் மானிட்டரி பாலிசி எவ்விதம் இருக்கும் என்ற யூகிப்பதை முதலீட்டாளர்கள் கருத்தில் கொண்டிருந்ததும் சந்தைகளின் தொய்வுக்கு ஒரு காரணம்.

இந்நிலையில், தன்னுடைய பணவியல் கொள்கையை இன்று அறிவித்த ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் உயர்த்தி 6.5 சதவிகிதமாக்கியுள்ளது. இது ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வே ஆகும். முந்தைய பணவியல் கொள்கை அறிவிப்பு நடந்த ஜூன் மாதத்திலும் ரிசர்வ் வங்கி இவ்வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், வங்கித் துறை பங்குகள் பெரும்பாலும் இன்று சரிந்தன. இறுதியில் சில பங்குகள் லாபத்துடன் முடிவுற்றாலும், நிஃப்டி பேங்க் மற்றும் BSE Bankex இரண்டு குறியீடுகளும் முறையே  0.60 சதவிகிதம், 0.55 சதவிகிதம் இழந்தன.

ஆட்டோமொபைல், டெலிகாம்  மற்றும் உலோகத் துறை பங்குகள் சற்று சரிந்தன. பவர், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறை பங்குகள் ஒரு கலப்படமான நிலையில் முடிந்தன. மருத்துவம், எண்ணெய், எப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறை சார்ந்த பங்குகள் சிறிது முன்னேற்றம் கண்டன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

கோல் இந்தியா 3.3%
லூப்பின் 2.6%
பார்தி இன்ப்ராடெல் 2.5%
இந்தியன் ஆயில் 2.2%
பாரத் பெட்ரோலியம் 2%
டாக்டர் ரெட்டி'ஸ் 2.1%
சன் பார்மா 1.6%
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் 1.75%
ஆதித்யா பிர்லா பாஷ ன்ஸ் 9.5%
GATI  8.9%
ஹிந்துஸ்தான் காப்பர்  8%
கரூர் வைஸ்யா வங்கி  6.9%
ஐ.டி.பி.ஐ. வங்கி 5.6%
ட்ரைடென்ட்  5,5%


விலை சரிந்த பங்குகள் :

ஹிண்டால்கோ 2.4%
வேதாந்தா 1.8%
மாருதி சுசூகி 1.75%
பார்தி ஏர்டெல் 1.7%
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 1.6%


இன்று மும்பை பங்குச் சந்தையில் 1401 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1,295 பங்குகள் விலை சரிந்தும், 144 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.