வளைகுடா நாடுகளில் வேலை... நம்பிச் சென்ற நேபாள பெண்களுக்கு வாரணாசியில் நடந்த கொடுமை 

நேபாள பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்துள்ளது  ஒரு கும்பல். அந்தக் கும்பலை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் வாரணாசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள பெண்கள்

வளைகுடா நாடுகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஒரு கும்பல் நேபாளத்தைச் சேர்ந்த 16 பெண்களை வாரணாசிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்தப் பெண்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பாமல் பாலியல் தொழிலில்  ஈடுபடவைத்துள்ளது அந்தக்  கும்பல். இந்த நிலையில், அந்தக் கும்பலிடம் தப்பிய 2 பெண்கள், தங்களுக்கு நடந்த கொடுமையை வாரணாசி காவல்துறையினரிடம் எடுத்துக் கூறினர். இன்னும் பல பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்களை மீட்கும்படி கண்ணீர் மல்க போலீஸாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள நேபாள நாட்டு தூதரகத்துக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி போலீஸாரிடம் தூதரக அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின்பேரில், டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் தங்கியிருந்த சர்வதேச பாலியல் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கொடுத்த தகவலையடுத்து வாரணாசியில் பாலியல் கும்பலிடம் சிக்கியிருந்த நேபாளத்தைச் சேர்ந்த  பெண்களைப் போலீஸார் மீட்டனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்கள் தங்கியிருந்த இடத்தில் 68 பாஸ்போர்ட்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் 7 பாஸ்போர்ட்கள் இந்தியப் பெண்களுடையது என்று தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட பெண்களைப் போலீஸார்  பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர். அந்தப் பாலியல் கும்பலைப்பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!