வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (01/08/2018)

கடைசி தொடர்பு:21:32 (01/08/2018)

மதச்சார்பற்ற அணி உருவாக சாத்தியமாகுமா மம்தா - சோனியா சந்திப்பு?

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதே தமது நோக்கம் என்றும், இதர எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அண்மைக்காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மம்தா. அதுபோன்ற கருத்துகளையும் அவர் தெரிவித்தவண்ணம் உள்ளார்.

மதச்சார்பற்ற அணி உருவாக சாத்தியமாகுமா மம்தா - சோனியா சந்திப்பு?

பி.ஜே.பி. இடம்பெறாத தேசிய அளவிலான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியாக சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. அவரின் முயற்சி பலிக்குமா என்பது போகப்போகத் தெரியும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை திருணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா இன்று மாலை சந்தித்துப் பேசினார். மேலும் அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, அவர் நான்கு நாள் பயணமாக, கொல்கத்தாவில் இருந்து டெல்லி சென்றிருக்கிறார். தமது முயற்சியை செயல்படுத்துவதன் தொடர்ச்சியாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து, கொல்கத்தாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பேரணியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. இடம்பெறாத ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இப்போதே தீவிர முயற்சியைத் தொடங்கியுள்ளனர். 

காங்கிரஸ் உள்பட மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே பொது எதிரியாக பி.ஜே.பி. பார்க்கப்படுவதால், காங்கிரஸை உள்ளடக்கிய மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் என்ற கருத்துடன் இப்போதே மம்தா தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் என்றே கூற வேண்டும். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி அன்று, கொல்கத்தாவில் 'மெகா பேரணி' ஒன்றை நடத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இந்தப் பேரணியில் பல்வேறு மாநிலக்கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தற்போது பி.ஜே.பி-யின் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் பங்கேற்கச் செய்வதன் மூலம், தன் முயற்சியில் வெற்றிபெறலாம் என்று மம்தா நினைக்கிறார். ஏற்கெனவே, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மம்தா பானர்ஜி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார். 

மம்தா பானர்ஜி உடன் சோனியா உள்ளிட்ட தலைவர்கள்

ஏற்கெனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவருடைய மகள் சுப்ரியா எம்.பி மற்றும் பி.ஜே.பி-யில் இருந்து ஒதுங்கியுள்ள மூத்தத் தலைவர்கள் ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார்.  காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருந்து, தேசிய கட்சியான காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி என்ற நிலைக்கு வந்துள்ளார் என்பதையே அவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன. 

அந்த வகையில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் பேரணி, அவரின் முயற்சிக்கு கைகொடுக்குமா என்பதை, அந்தப் பேரணியில் பங்கேற்கும் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகளின் கருத்தொற்றுமையைப் பொறுத்தே எதிர்பார்க்க முடியும். "அடுத்தாண்டு மே மாதம்வாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்னும் நிலையில், அதன்று நான்கு மாதங்களுக்கு முன், அதாவது ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள பேரணியால், பி.ஜே.பி. கூட்டணி வீழ்த்தப்படுமா, மாநிலக் கட்சிகளின் பங்கு புதிய அரசில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அந்தக் கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்தே கூறமுடியும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதே தமது நோக்கம் என்றும், இதர எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அண்மைக்காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மம்தா. அதுபோன்ற கருத்துகளையும் அவர் தெரிவித்தவண்ணம் உள்ளார்.

இதுதொடர்பாக, பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ள மம்தா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இப்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசி, அவர்களின் பங்களிப்பையும், ஆதரவையும் பெற்ற பிறகே மத்தியில் கூட்டாட்சி என்பதற்கான உத்வேகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், கடந்த 1989-ம் ஆண்டிலும், 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியின்போது, ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, இப்போதே அதுபோன்ற சூழலில் செயல்பட வேண்டிய நடைமுறைகளையும் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து மற்ற கட்சிகளின் தலைவர்களும் வகுத்தால் சாத்தியமாகக்கூடும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்