ஐடிபிஐ பங்குகளை எல்.ஐ.சி வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காவது காலாண்டில், ரூ.55,588.26 கோடி வரை வராக்கடன் பிரச்னையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஐடிபிஐ வங்கியின் 43 சதவிகிதப் பங்குகளை எல்.ஐ.சி. வாங்குவதற்கான ஒப்புதலை எல்.ஐ.சி-யின் ஆணையக் குழு சமீபத்தில் வழங்கியிருந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையும் அதற்கான ஒப்புதலைத் தந்துள்ளது. 

எல் ஐ சி

தற்போது, மத்திய அரசிடம் ஐடிபிஐ வங்கியின் 86 சதவிகிதப் பங்குகள் உள்ளன. முதலில், இவற்றை தனியார்வசம் ஒப்படைக்கும் யோசனையில் மத்திய அரசு இருந்தது. ஆனால், அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், எல்.ஐ.சி நிறுவனத்துக்கு 51 சதவிகிதப் பங்குகளை விற்க முடிவெடுத்தது. ஏற்கெனவே, எல்.ஐ.சி-யின் வசம் ஐடிபிஐ வங்கியின் 8 சதவிகிதப் பங்குகள் இருப்பதால், கூடுதலாக 43 சதவிகிதப் பங்குகளை வாங்குவதன்மூலம் மொத்தம் 51 சதவிகிதப் பங்குகளை எல்.ஐ.சி. கைப்பற்ற உள்ளது. 

இந்தப் பங்கு விற்பனையின்மூலம் ஐடிபிஐ வங்கிக்கு தோராயமாக 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் இவ்வங்கியை வாங்குவதன்மூலம் இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் வங்கியின் கிளைகளை விரிவுபடுத்துவது சாத்தியமாகும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். எல்.ஐ.சி-யின் வசமான பின்னர், ஐடிபிஐ வங்கியின் நிர்வாகக்குழுவில் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களைத் தங்கள் சார்பாக நியமிக்க உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!