வீட்டில் ஒரே குழியில் நான்கு உடல்கள்! கேரளாவை பதறவைத்த மந்திரவாதி

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரணம்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்- சுசீலா தம்பதியினர். இவர்களுக்கு அர்ஷா மற்றும் அர்ஜூன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், அப்பகுதியில் ரப்பர் தோட்டம் வைத்துள்ளனர். மேலும், கிருஷ்ணன் மாந்திரீகமும் செய்துவந்துள்ளார். நேற்று, அவரது வீட்டுச் சுவர் மற்றும் தரையில் ரத்தக்கறை இருந்துள்ளதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு யாரும் இல்லாததால், இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த காவல்துறையினர், அப்பகுதியில் சோதனைசெய்தனர். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள குழியில், அழுகிய நிலையில் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழியில் நான்கு பேரின் சடலங்கள் ஒன்றின்மீது ஒன்றாக அடிக்கிவைக்கப்பட்டதுபோல காணப்பட்டது. இதையடுத்து, தடயவியல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சுத்தியல் மற்றும் கத்தியைக் கைப்பற்றிய காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,  ``கிருஷ்ணன், மாந்திரீக பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்த மரணங்களுக்கான காரணங்களை ஆராய்ந்துவருகிறோம். வீட்டில் எந்தப் பொருளும் திருடப்படவில்லை. எல்லா கோணங்களிலும் விசாரித்துவருகிறோம். இந்தக் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து கத்தி மற்றும் சுத்தியல் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்’’ என்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!