வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:18:00 (02/08/2018)

பாலியல் வன்கொடுமை சிறுமிகளின் முகத்தை மூடிய படத்தைக்கூட வெளியிடக் கூடாது - உச்ச நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாது என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்


பீகார் மாநிலம், முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன்கூடிய தனியார் தொண்டு நிறுவன காப்பகம் ஒன்று இயங்கிவருகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு சிறுமி காணவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், காவல்துறையினர், ஜேசிபி எந்திரம் மூலம் சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்தக் காப்பகத்தில் மீட்கப்பட்ட சிறுமிகளில் முதல் கட்டமாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  பாலியல் வன்கொடுமைக்கு மூளையாகச் செயல்பட்ட பிரிஜேஷ் என்ற நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் மாஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களையோ மங்கலான புகைப்படங்களையோ வெளியிடக் கூடாது என ஆணை பிறப்பித்துள்ளது.