வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (02/08/2018)

கடைசி தொடர்பு:21:30 (02/08/2018)

வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் - தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் கட்சிகள்!

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாட 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குச்சீட்டு

வாக்குச்சீட்டு முறை மாற்றப்பட்டு, கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு முறை குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், குறிப்பிடும்போது காகிதப் பயன்பாடு குறைவதாகவும், பல ஆயிரம் கோடி மிச்சப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. கடந்த காலங்களில் மின்னணு வாக்குப்பதிவு முறையால் நடைபெற்ற தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு முறையை மாற்ற வேண்டும் என்றும் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு முறையில், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்த வேண்டும் என்று கூறி இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாட 17 கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.