வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (02/08/2018)

திரிணாமுல் எம்.பி-க்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளித்த மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் தற்போது தீவிரமான அவசர நிலை பிரகடனம் நடைமுறையிலுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ளார். 

மம்தா பானர்ஜி

அசாமில் வாழும் மக்களில் யார் உண்மையில் இந்தியர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு தேசிய குடிமக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த இறுதிப் பட்டியலில் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதனால், அவர்கள் அகதிகளாகும் சூழல் உருவாகியுள்ளது. அதையடுத்து, அசாமில் அசாதாரணச் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல்பாட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்.

அசாமில் நிலவும் சூழல் குறித்து அறிந்துகொள்வதற்காகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.பி-க்கள் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய குழு அஸ்ஸாம் மாநிலத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. அவர்களை, அம்மாநில அரசு சில்சார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி, `பா.ஜ.க-வினர் யார்? அவர்களை இங்கு (மேற்கு வங்கம்) யாருக்கும் தெரியாது. அவர்கள் வெறும் குண்டர்கள். அவர்களுக்கு மேற்குவங்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்களுடைய இருப்பே கேள்விக்குறியானது. அவர்கள் தேசிய குடிமக்கள் பட்டியலை இங்கும் கொண்டுவரவுள்ளார்கள்.

அதை, இங்கே எப்படிக் கொண்டு வருகிறார்கள் என்று நான் பார்க்கிறேன்? நாட்டில் தீவிரமான அவசரநிலை பிரகடனம் அமலில் உள்ளது. நான் நினைக்கிறேன், இது அவர்களின் முடிவுக்கான தொடக்கம். அவர்கள் விரக்தியில் உள்ளனர். அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.