பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி - ஆண்டிகுவா நாட்டில் மெகுல் சோக்‌ஷி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, சுமார் ரூ.13,578 கோடி மோசடி செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினார்கள். எனவே அவர்கள் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் அவர்களைப் பிடிப்பதற்காக சர்வதேசக் காவல்துறையின் உதவியை சிபிஐ நாடியது. இதன் தொடர் நடவடிக்கையாக, நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. இவர்களைப் பல்வேறு நாடுகளில் சல்லடை போட்டுத் தேடியதில், மெகுல் சோக்‌ஷி மட்டும் ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் ஆண்டிகுவா நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமையையும் வாங்கியுள்ளார். அந்நாட்டின் குடியுரிமையை கடந்த ஜனவரி மாதத்திலேயே பெற்றுவிட்டதாகத் தெரியவருகிறது. அதன்பிறகே இங்கிருந்து தலைமறைவானார். 

மெகுல் சோக்‌ஷி

தற்போது அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக ஆண்டிகுவா நாட்டின் உயரதிகாரிகளுடன் சிபிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மேலும், மெகுல் சோக்‌ஷியின் குடியுரிமையை ரத்துசெய்ய வைத்து, அதன்பின் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவர அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது. வங்கி மோசடி வழக்குகளிலிருந்து தப்புவதற்காக முன்கூட்டியே ஆண்டிகுவா குடியுரிமை ஏற்பாடுகளைச் செய்துமுடித்து, திட்டமிட்டு தப்பியிருப்பதாகத் தெரியவருகிறது. விரைவில் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு வரப்படுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!