வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (03/08/2018)

கடைசி தொடர்பு:07:52 (03/08/2018)

`என் மகன் வாழ்நாளிலும் அது நடக்காது' - வட கர்நாடக கோரிக்கைக்குப் பதிலளித்த தேவ கௌடா!

'வட கர்நாடகம் உருவாக வேண்டும் எனக் கூறுவது, எனது வாழ்நாள் மட்டுமல்ல எனது மகன் குமாரசாமியின் வாழ்நாளிலும்கூட நடக்காது' என முன்னாள் பிரதமர் தேவ கௌடா தெரிவித்துள்ளார்.

தேவ கௌடா

கடந்த ஜூலை 5-ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில், வட கர்நாடக மாவட்டங்களை முதல்வர் குமாரசாமி புறக்கணித்துவிட்டதாக, வட கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் குற்றம் சாட்டின.  குமாரசாமியைக் கண்டிக்கும் வகையில், நாளை பெலகாவியில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, வட கர்நாடகத்துக்கு என்று தனியாகக்  கொடி அறிவிக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக அரசியல் களத்தில் மீண்டும் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டித்துவரும் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி, இவ்விவகாரத்தில் போராட்டக்காரர்களை பா.ஜ.க-வினர்தான் தூண்டிவிடுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஆனால், இதை மறுத்துள்ள எடியூரப்பா, ``தனி மாநில கோரிக்கையைப் பா.ஜ.க ஆதரிக்கப்போவதில்லை. வட கர்நாடகத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுவதற்கு குமாரசாமிதான் முக்கியக் காரணம்" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, இவ்விவகாரம்குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவ கௌடா, ``பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் வட மாவட்டங்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. ஆட்சிக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எடியூரப்பா போன்ற பா.ஜ.க-வினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். எடியூரப்பாவின் இந்தக் கனவு பலிக்காது. வட கர்நாடகம் உருவாக வேண்டும் எனக் கூறுவது எனது வாழ்நாள் மட்டுமல்ல, எனது மகன் குமாரசாமியின் வாழ்நாளில்கூட நடக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க