மின்சார ரயிலில் பயணித்த பாம்பு - ஓட்டம் பிடித்த பயணிகள்! | snake in suburban Mumbai local trains people get panic

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (03/08/2018)

கடைசி தொடர்பு:09:26 (03/08/2018)

மின்சார ரயிலில் பயணித்த பாம்பு - ஓட்டம் பிடித்த பயணிகள்!

மும்பை புறநகர் மின்சார ரயிலுக்குள் பயணிகளுடன் பயணியாக பாம்பு ஒன்று பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பாம்பு

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களில் மும்பையும் ஒன்று. அதிலும், அலுவலகம் செல்லும் மக்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என மும்பை புறநகர் ரயில் நிலயங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளிக்கொண்டு ரயில்களில் பயணம் மேற்கொள்வர். சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல நேற்று காலை புறப்பட்டது, புறநகர் ரயில். அப்போது, ரயிலின் 2-ம் வகுப்பு பெட்டியில் பச்சைப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பெட்டியில் உள்ள கைப்பிடி கம்பியில் பாம்பு நெளிந்து ஊர்வதைப் பயணிகள் கண்டுள்ளனர். பாம்பை வெறியேற்ற முயன்றபோது, அது அவர்களை நோக்கிப் பாய்ந்தது. இதனால், பதற்றத்தில் பயணிகள் அலறத் தொடங்கினர். 

அச்சத்தில் உறைந்த  பயணிகள், ரயிலை விட்டு இறங்க முடியாமல் தவித்தனர். இதனால், ரயிலை நிறுத்தும் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.  அதற்குள், ரயில் தானே ரயில்நிலையத்தை அடைந்துவிட்டது. ரயில் நின்றவுடன், பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இதையறிந்த ரயில்வே போலீஸார், தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள், மின்விசிறிக்குள் இருந்த பச்சைப் பாம்பை பத்திரமாகப் பிடித்துச்சென்றனர்.  அதன்பிறகே, பயணிகள் நிம்மதியாகப் பயணத்தை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாகச்  சென்றன.

இதுகுறித்து, மத்திய ரயில்வே செய்தித்தொடர்பாளர் சுனில் உதாசி கூறுகையில், ` ரயில், இரண்டு பயணங்களை முடித்து, மூன்றாவது பயணம் சென்றபோதுதான்  பாம்பு புகுந்துள்ளது. எப்படி பாம்பு புகுந்தது என்பது கண்காணிப்பு கேமராவில் நிச்சயம் பதிவாகியிருக்கும். அதை ஆய்வுசெய்தால் தெரிந்துவிடும்' என்றார்.