வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (03/08/2018)

கடைசி தொடர்பு:18:11 (03/08/2018)

``ஆதரிச்சோமா...நாங்களா?" - நியூட்ரினோ பற்றி அமைச்சரின் பேச்சால் கொதிப்பில் கிராம மக்கள்

தேனி மாவட்ட மக்கள் நியூட்ரினோ திட்டத்துக்கு 2010ல் பெரும் ஆதரவு கொடுத்தார்கள் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜித்தேந்தர் சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

``ஆதரிச்சோமா...நாங்களா?

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில், மத்திய அரசு 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க திட்டமிட்டது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து ஆய்வு மையம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. நியூட்ரினோ திட்டத்துக்குத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னரே திட்டம் செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில், நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில், தேனி மாவட்ட மக்கள் நியூட்ரினோ திட்டத்துக்கு 2010 ல் பெரும் ஆதரவு கொடுத்தார்கள் என நாடாளுமன்றத்தில், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜித்தேந்தர் சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நியூட்ரினோ திட்டம்

தேனி வந்திருந்த விவேக் தத்தார் :

கடந்த ஜூலை 14ம் தேதி, தேனி வந்திருந்த, நியூட்ரினோ திட்டத்தின் திட்ட அலுவலர் விவேக் தத்தார் மற்றும் விஞ்ஞானி வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மதுரை வடபழஞ்சியில் அமைந்துள்ள மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையத்தை தேனி மக்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் விவேக் தத்தார். நியூட்ரினோ திட்டம் குறித்து பொய்யான அறிவியல் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டு மக்கள் பயமுறுத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், நியூட்ரினோ திட்டம் குறித்து பொதுமக்களிடம் இனி தொடர்ச்சியாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார். இந்நிலையில், 01/08/2018 அன்று நாடாளுமன்றத்தில் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதுதான் அமைச்சர் ஜித்தேந்தர் சிங் மேலே சொன்னபடி பதில் அளித்துள்ளார்.

நியூட்ரினோ திட்டத்துக்குத் தேனி சிறந்த இடம்:

மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்காகச் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளனவா, தேனி மக்களின் போராட்டத்தால் திட்டத்துக்கு வேறு இடம் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனவா போன்ற நியூட்ரினோ திட்டம் தொடர்பான ஐந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜித்தேந்தர் சிங், ``நியூட்ரினோ திட்டத்துக்கு வேறு இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. தமிழகமே சிறந்த இடம். குறைந்த அதிர்வு, சுற்றுச்சூழல் தாக்கம் குறைவு, புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேனிதான் சிறந்த இடம். திட்டம் குறித்து கடந்த 2010ம் ஆண்டு அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்த போது மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளில், நியூட்ரினோ திட்டம் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது” என்றார்.

தேனி மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தார்களா?

அமைச்சரின் கூற்றுப்படி கடந்த 2010 ம் ஆண்டு தேனி மாவட்ட மக்கள், குறிப்பாக அம்பரப்பர் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களான, பொட்டிபுரம், டி.புதுக்கோட்டை, குப்பனாசாரிப்பட்டி, சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது நியூட்ரினோ விஞ்ஞானிகள் குழு. அப்போதுதான் கிராம மக்கள் அனைவரும் நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்கிறார் அமைச்சர். இது தொடர்பாக பொட்டிபுரம் கிராம மக்களிடம் கேட்ட போது, ``2010ல் நியூட்ரினோ திட்ட விஞ்ஞானிகள் எங்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு நாங்கள் எந்த ஆதரவும் கொடுக்கவில்லை. உண்மையில் அந்தக் கூட்டம் முழுமையடையாமல், சலசலப்புடன்தான் நிறுத்தப்பட்டது.

கிராம மக்கள்

திட்டத்தின் மீது இருந்த அச்சமும், அதைச் சரியாக விளக்க முடியாமல் தவித்த விஞ்ஞானிகளுமே அதற்குக் காரணம். கூட்டத்தில் பெரும்பாலும், உங்களுக்கு இதைச் செய்கிறோம். அதைச் செய்கிறோம் என்றார்கள். வீடு, பள்ளி, கழிப்பிடம் போன்றவையும், சாலையும் அமைத்துக் கொடுப்போம் என்றார்கள். அதைக் கேட்ட போது நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அதன் பின்னரே அதன் ஆபத்துகள் தெரிய வந்தன. போராட்டத்தில் இறங்கினோம். அன்று மட்டுமல்ல, என்றுமே நாங்கள் நியூட்ரினோ திட்டத்துக்குச் சரி எனத் தலையாட்ட மாட்டோம்.!” என்றனர் கொதிப்போடு.


டிரெண்டிங் @ விகடன்