வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (04/08/2018)

கடைசி தொடர்பு:08:11 (04/08/2018)

ஏர் இந்தியா பயணிகளுக்கு உலர் பழங்கள், பிஸ்கட்டுகள் வழங்க ஆலோசனை!

ஏர் இந்தியா விமானத்தில், ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும் எகானமி கிளாஸ் பயணிகளுக்கு உணவுப் பாக்கெட் வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலர் பழங்கள், பிஸ்கட்டுகள், பன் ஆகியவை இந்த உணவுப் பாக்கெட்டில் இருக்கும். இந்த உணவுப் பாக்கெட்டை விமானத்தில் ஏறச்செல்லும் நுழைவாயிலில் வைத்துக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா

ஏற்கெனவே சாண்ட்விச், சமோசா போன்ற உணவுப் பொருள்களைக் கொடுத்தபோது அந்த உணவுப் பொருள்கள் கெட்டுப்போய்விட்டதாக புகார்கள் வந்தன. எனவே, இம்முறை விரைவில் கெட்டுப்போக வாய்ப்பில்லாத உணவுப்பொருள்களை இந்தப் பாக்கெட்டில் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேட்டரிங் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும், கேட்டரிங் பொருள்களை விமானத்தில் எடுத்துச்செல்லும் அவசியமில்லாதபோது விமானத்தின் பாரமும் குறையும், அதனால் பெட்ரோல் செலவையும் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இதைக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் தொடர்கின்றன. ஏர் இந்தியா விமானச் சேவை மிகப்பெரிய நஷ்டத்தை தினமும் சந்தித்துவரும் வேளையில் இந்தச் சிக்கன நடவடிக்கை ஓரளவு பலனளிப்பதாக இருக்கும். கடந்த 2016-17-ம் நிதியாண்டில் மட்டுமே இந்நிறுவனம் ரூ.47,145.62 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.