வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (04/08/2018)

கடைசி தொடர்பு:09:06 (04/08/2018)

`யோகி ஆதித்யநாத் உயிருக்கு ஆபத்து..?' - அலார்ட் நிலையில் டெல்லி மற்றும் உ.பி போலீஸார்

யோகி ஆதித்யநாத் உயிருக்குத் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்தியப் பிரதேச போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத்

நாட்டின் 72-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான, ஆயத்த வேலைகளை மத்திய அரசு விருவிருப்பாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையில், டெல்லி செல்லும் யோகியைக் கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. யோகிக்கு, உத்தரப் பிரதேசத்திலும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து, மத்தியப் பிரதேச காவல்துறையின் புலனாய்வுப் பிரிவானது டெல்லி மற்றும் உ.பி. போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், யோகியின் பாதுகாப்பை பலமடங்கு பலப்படுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கையை அடுத்து, லக்னோவில் உள்ள முதல்வர் அலுவலகம் மற்றும் அவரது இல்லத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத்தின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.