வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (04/08/2018)

கடைசி தொடர்பு:13:51 (04/08/2018)

'மீசை’ ஹரீஷ்... இவர் கேரள பெருமாள் முருகன்! குபீர் சர்ச்சை நாவலின் கதை!

இலக்கிய செரிவு மிக்க மண்ணில் நாவல் ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மாத்ரூபூமி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

'மீசை’ ஹரீஷ்... இவர் கேரள பெருமாள் முருகன்! குபீர் சர்ச்சை நாவலின் கதை!

கேரளாவில் `மாத்ருபூமி' வார இதழ், இலக்கிய உலகில் பிரபலம். இந்த இதழில் `மீசை' என்ற தலைப்பில் தொடர்கதை ஒன்று வெளியாகிக்கொண்டிருந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், குட்டநாடு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீசை வளர்க்க, ஆதிக்கச் சாதியினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி மீசை வளர்க்க முயலும் ஒருவரை மையமாக வைத்து கதை நகர்ந்துகொண்டிருந்தது. தொடர் மூன்று வாரங்கள்தான் வெளியானது.

திடீரென மாத்ரூபூமி இதழில் ஓர் அறிவிப்பு. `எழுத்தாளர் தொடர்ந்து எழுத மறுக்கிறார். இதனால், இத்துடன் தொடர் நிறுத்தப்படுகிறது' என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மலையாள இலக்கிய உலகில், இந்த அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடரை எழுதிய ஆசிரியர் ஹரீஷ், மலையாள இலக்கிய உலகில் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர். இவரின் பல சிறுகதைகள், `கேரள சாகித்ய அகாடமி' விருதைப் பெற்றுள்ளன. ஹரீஷை மிரட்டி நாவல் எழுதவிடாமல் சங்பரிவார் அமைப்புகள் அதகளம் செய்துகொண்டிருந்தன. 

மீசை ஆசிரியர் ஹரீஸ்

`பெண்கள் ஏன் நகைகள் அணிந்து தங்களை அலங்கரித்துக்கொண்டு கோயிலுக்கு வருகிறார்கள்?' என்ற கேள்விக்குப் பதிலாக வரும் உரையாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு, சங்பரிவார் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. முதலில் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனம், பிறகு வன்முறையில் இறங்கியது. 

ஹரீஷின் குடும்பப் பெண்கள் கொச்சையான வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டனர். சமூக வலைதளங்களில் அவரை ஏகத்துக்கு விமர்சித்தனர். ஃபேஸ்புக் கணக்கையே டி-ஆக்டிவேட் செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வேறு. அவர்களுடன் இருவார காலமாக ஹரீஷ் போராடி வந்த நிலையில், தொடரை நிறுத்தும் முடிவுக்கு வந்தார் ஹரீஷ். முற்போக்கு மண்ணாக, இலக்கியவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் மக்கள் நிறைந்த கேரளாவிலேயே ஒரு நாவல் நிறுத்தப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

`மாத்ருபூமி' வார இதழின் ஆசிரியர் கமல்ராம் சஞ்சீவ், `ஹரீஷ், தன் தொடரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இலக்கியச் செறிவு நிறைந்த மண்ணில், ஒரு நாவல் கொடூரமாகக் கொலை செய்யப்ட்டுள்ளது' என்று ட்வீட் செய்திருந்தார். கொச்சி அருகே திருப்பணித்துரா என்ற இடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மாத்ரூபூமி நாளிதழின் ஸ்டாலை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ஐக்கியவேதியைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்கூட ஹரீஷுக்கு ஆதரவு தெரிவித்தும் பலனில்லை. ``கருத்து சுதந்திரத்தில், எழுத்தாளர்களுக்கு ஆதரவாக கேரள அரசு இருக்கும். கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹரீஷ் தொடர்ந்து எழுத வேண்டும்'' என்று பினராயி விஜயன் ஹரீஷுக்கு வேண்டுகோள்விடுத்தார். எனினும் சங்பரிவார் அமைப்பை எதிர்த்துகொண்டு அவரால் தொடர்ந்து நாவல் எழுத இயலவில்லை.

மீசை நாவல் எழுதிய ஹரீஸ்

பாதிக்கப்பட்ட எழுத்தாளர் ஹரீஷ் ``நாட்டை ஆள்பவர்களுக்கு எதிராக என்னால் போராட முடியவில்லை. பலவீனமான என் மீதும் குடும்பத்தார் மீதும் நடத்தும் வன்முறையை, என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்று வேதனையுடன் குறிப்பிட்டார். 

இதற்கிடையே, மாத்ருபூமியில் இருந்து அந்த நாவலை திரும்பப் பெற்ற ஹரீஷ், அதை ஒரு புத்தமாக வெளியிட்டார். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற டி.சி பதிப்பகம், அந்த நாவலை வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை டி.சி பதிப்பகத்தின் சி.இ.ஓ ரவி டீசி உறுதிப்படுத்தினார். தற்போது அவருக்கும் ஃபேஸ்புக்கில் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.  

இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், `மீசை’ நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். `ஹமிஷ் மெக்டொனால்டு எழுதிய `தி பாலிஸ்டர் பிரின்ஸ்’, சல்மான் ருஷ்டி எழுதிய `சாத்தானின் வேதங்கள்’ புத்தகங்களுக்கு  தடை விதித்ததைப் போல, இந்து பெண்களை அவமதிக்கும் விதத்தில் உள்ள `மீசை’ நாவலுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சத்ரசுத், நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டார். 

`இது இன்டர்நெட் யுகம். நீங்கள் இதை ஒரு பிரச்னையாக முன்வைக்கிறீர்கள்.  தேவையில்லாமல் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். சாத்தானின் வேதங்கள், தி பாலிஸ்டர் பிரின்ஸ் புத்தகங்களுக்கு தடை விதித்ததை இதனுடன் ஒப்பிடக் கூடாது. புத்தகங்களுக்கு தடை விதிக்கும் கலாசாரம் தவறானது’ எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வலதுசாரி அமைப்புகள், மலையாள எழுத்தாளர்கள் மீது பாய்வது இது முதல் முறையல்ல. 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட,  எம்.டி.வாசுதேவன் நாயர் மீது பாரதிய ஜனதா தலைவர்கள் பாய்ந்தனர். சினிமா தியேட்டரில் தேசியகீதம் ஒளிபரப்புவதற்கு எதிராகக் கருத்து வெளியிட்ட கேரளா கலாசித்ரா அகாடமி தலைவர் கமலை, பாகிஸ்தான் போகுமாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறினர். கவிஞர் கரீம்புழா ஸ்ரீகுமார் மீது கொல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. பல எழுத்தாளர்கள் வலதுசாரி அமைப்புகளிள் செயல்பாடுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். 

பெருமாள்முருகனின் `மாதொருபாகன்' நாவலுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புத்தகத்துக்குத் தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், `உங்களுக்குப் பிடிக்காத படைப்புகளைப் படிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?' என்று கேள்வி எழுப்பியதோடு,  `பிடிக்காதப் படைப்புகளைத் தூக்கி எறியுங்கள்' என்று கருத்து வெளியிட்டது. மாதொருபாகன் நாவலுக்குத் தடைவிதிக்கவும் மறுத்தது. 

பெருமாள்முருகனுக்கு தமிழகத்தில் நேர்ந்த கதைதான் கேரளத்தில் ஹரீஷுக்கும் நடந்திருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்