வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (04/08/2018)

கடைசி தொடர்பு:11:35 (04/08/2018)

இறப்பை எப்படி தடுக்கலாம்? - இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு அசத்தல் அறிவுரை

ஸ்வச் பாரத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினால் ஆண்டுக்கு 3 லட்சம் பேரின் இறப்புகளைத் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஸ்வச் பாரத்

ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள அனைத்து நகரங்களின் சாலைகள், கட்டமைப்புகள் ஆகியவற்றைத் தூய்மை செய்தல் மற்றும் நாடு முழுவதும் ஒரு திறந்தவெளி கழிப்பிடம்கூட இல்லாமல் ஆக்குவது, அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயக் கழிப்பறைகளை உருவாக்குவது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இது தொடங்கி 4 வருடங்கள் ஆன நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் மத்திய அரசு மூலம் பல இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

வயிற்றுப்போக்கு, பொது இடங்களில் மலம் கழித்தலால் ஏற்படும் தொற்று நோய் போன்றவற்றால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஸ்வச் பாரத் திட்டத்தை 100 சதவிகிதம் முழுமையாகச் செயல்படுத்தி அதை முறையாகப் பயன்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் இறப்புகளைத் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.நா.சபையால் நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் மிஷனின்  சுகாதார பாதிப்பு குறித்த ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 89 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.