வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (04/08/2018)

கடைசி தொடர்பு:14:47 (04/08/2018)

முதல்முறையாக காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாகும் பெண் !

ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் வழக்கறிஞர், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்கு நீதிபதிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அதன்படி பெரும் பிரச்னைகளுக்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களின் வரிசையில், கடந்த 90 வருடங்களில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் சிந்து சர்மா என்ற பெண் வழக்கறிஞர், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சிந்து சர்மா அதே காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் சேர்ந்து ரஷித் அலி தார் என்பவரும் காஷ்மீர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன்படி வரும் திங்கள் கிழமை இவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாகப் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.