பரூக் அப்துல்லா வீட்டை பதறவைத்த மர்ம நபர் - என்கவுன்டர் செய்த போலீஸ் | Man gunned down by security in farooq abdullah's residence today

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (04/08/2018)

கடைசி தொடர்பு:15:15 (04/08/2018)

பரூக் அப்துல்லா வீட்டை பதறவைத்த மர்ம நபர் - என்கவுன்டர் செய்த போலீஸ்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தவரை வீட்டின் பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த நபருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

பரூக் அப்துல்லா

Photo Credit - ANI

ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றதையடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் ரோந்துப் பணியில் போலீஸார் மற்றும் ராணுவப் படையினர் ஈடுபடுவது வழக்கம். மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் அலுவலகம், வீடு போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். அதன் வகையில், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், பாதுகாப்பையும் மீறி பரூக் அப்துல்லாவின் வீட்டுக்குள் நுழைய முயன்ற ஒருவரை போலீஸார் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அந்த நபர், வி.ஐ.பி கேட் வழியாக காரில் உள்ளே செல்ல முயற்சி செய்திருக்கிறார். அவரைத் தடுக்க முற்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உள்ளே செல்ல முயன்றவர் பெயர் முரபாஸ் ஷா என்பதும், அவர் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.