வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (04/08/2018)

கடைசி தொடர்பு:15:41 (04/08/2018)

முன்பதிவு ரத்து மூலம் ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியுள்ள ரயில்வே!

2016-17-ம் ஆண்டில் மட்டும் ரயில் பயணச்சீட்டு முன் பதிவு ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ரூ.1,400 கோடி லாபம் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு

ரயில் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்த பயணச்சீட்டை ரத்து செய்யும்போது அவர்களின் பயணச்சீட்டுத் தொகையிலிருந்து 25 சதவிகிதம் ரயில்வே வசூலிக்கும். அதுவே ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாக ரத்து செய்தால் பயணத் தொகையில் இன்னும் அதிகமாகப் பிடித்தம் செய்யப்படும். இப்படி ரத்து செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளின் மூலம் மட்டும் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியுள்ளது ரயில்வே நிர்வாகம். இந்தத் தகவலை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜேன் கோஹெயின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தென்னக ரயில்வேக்கு மட்டும் ரூ.103.27 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டுவரை 48 மணி நேரத்துக்கு முன் ஏ.சி 3 பயணச்சீட்டை ரத்து செய்தால் 180 மற்றும் 90 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏசி 2  பயணச்சீட்டை ரத்து செய்தால் 200 மற்றும் 100 ரூபாய் பெறப்பட்டுள்ளது. மேலும், ஸ்லீப்பர் கிளாஸ் போன்றவற்றை ரத்து செய்தால் 120, 60 ரூபாய் என வசூலிக்கப்பட்டது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.