கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்! முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதனால் இன்று மூவர் குழு அணையை ஆய்வு செய்தது.

முல்லைப்பெரியாறு அணை

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக ஆய்வை மூவர் குழு இன்று நடத்தியது. மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில், தமிழக பொதுப் பணித்துறை கூடுதல் செயலர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மூவர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு,தற்போது முல்லைப்பெரியாறு அணையை மூவர் குழு ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது. பேபி அணை அருகே உள்ள மரங்களை வெட்டி பேபி அணையைப் பலப்படுத்துவது, அணைக்குச் செல்லும் வல்லக்கடவு பாதையைச் சீரமைப்பது, அனுமதி மறுக்கப்பட்டு தேக்கடியில் நிறுத்தப்பட்டிருக்கும் தமிழ் அன்னை படகை இயக்க அனுமதியளிப்பது உட்பட தீர்வு காணப்படாத பல பிரச்னைகள் உள்ள நிலையில், இந்த முறையாவது மூவர் குழு ஏதேனும் நல்ல செய்தி சொல்லுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள் மூவர் குழுவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!