வெளியிடப்பட்ட நேரம்: 01:06 (05/08/2018)

கடைசி தொடர்பு:01:06 (05/08/2018)

`45,000 கோடி ரூபாய் கடனிலிருக்கும் ஒருவருக்கு 1,30,000 கோடி வழங்குகிறார்கள்’ -ரபேல் ஊழல் தொடர்பாக ராகுல்!

45 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலிருக்கும் ஒருவருக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக ராபேல் போர்விமான ஊழல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல்

புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அசோக்கெலாட் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி  பங்கேற்கவில்லை.

கூட்டம்

இந்த கூட்டத்துக்கு பின்,  ‘இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தவறியது, பெருகிவரும் ஊழல் ஆகிய அவலங்களை  முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக மக்களிடையே பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது’என ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் `ராபேல் போர் விமான ஊழல் குறித்து இன்றைய கூட்டத்தில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனியின் விளக்கம் சிறப்பாக அமைந்தது. ஆண்டனி விளக்கும் போது இந்திய மக்களிடமிருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாயை பெற்று 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலிருந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது’ என ராகுல் ட்விட் செய்துள்ளார். ஆனால் யாருக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டது என ராகுல் தனது ட்வீட்டில் குறிப்பிடவில்லை.