வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (05/08/2018)

கடைசி தொடர்பு:10:24 (06/08/2018)

’அம்மாவை விஷம் வைத்துக் கொல்ல அப்பா முயற்சி செய்தார்’ - சிறுவன் வாக்குமூலம்

மனைவியின், வாய், மூக்கு மற்றும் கண்களில் பசையைத் தடவி, நூதன முறையில் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் விடிசா பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றி போலீஸார் விவரிக்கையில், `விடிசா பகுதியில் வசித்து வரும் தம்பதி ஹல்கெரம் குஷ்வஹா மற்றும் துர்கா பாய். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹல்கெரம் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதியன்று கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் நீடித்துள்ளது. இதனால், உச்சகட்ட கோபத்தில் இருந்த ஹல்கெரம், மனைவியைக் கொலை செய்துவிடலாம் என முடிவு செய்திருக்கிறார். அதனால், வீட்டில் இருந்த தனது இரண்டு மகன்களையும் கடைவீதிக்குச் சென்று வாருங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்.

மகன்கள் சென்றபின், மனைவியின் மூக்கு, காது மற்றும் கண்களில் பசையைத் தடவி மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். வெளியே சென்ற மகன்கள் வீட்டுக்கு வந்தவுடன், சுயநினைவின்றி கிடந்த தனது தாயை கண்ட இருவரும் உடனடியாக போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் அளித்த புகாரின் பேரில் ஹல்கெரம் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். `ஏற்கெனவே, அம்மாவை விஷம் வைத்துக் கொலை செய்யப் பலமுறை தந்தை முயற்சி செய்தார்' என்று மகன் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது' என விவரித்தார்.