வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (05/08/2018)

கடைசி தொடர்பு:12:59 (05/08/2018)

பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

இந்தியாவிலேயே முதல்முறையாகப் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க இருப்பதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. 

பசு காவலர்கள்

நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர் மாட்டிறைச்சி சாப்பிடும் மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பசு பாதுகாவலர்களுக்கு என பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக பசு சேவா கமிஷனின் தலைவர் என்.எஸ். ராவத் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “ உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பசு பாதுகாவலர்களையும் அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து உண்மையான பசு பாதுகாவலர்களைப் பிரிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடி அறிவித்திருந்தார் அதனை மனதில் கொண்டும் இந்த முறை செயல்படுத்தப்படவுள்ளது. மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பசு பாதுகாவலர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.