வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (05/08/2018)

கடைசி தொடர்பு:10:19 (06/08/2018)

மருத்துவமனையில் நுழைந்த பாம்பு : ஓட்டம்பிடித்த நோயாளிகள்!

உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பாம்பு நுழைந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து, அந்த பாம்பு வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விடப்பட்டது.

மருத்துவமனை பாம்பு


உத்தரப்பிரதேச மாநிலம் பைரூச்சில் செயல்பட்டு வருகிறது கிராம சுகாதார நிலையம். இங்கு தினந்தோறும் ஏராளாமான உள் மற்றும் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநோயாளிகள் காத்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், ஐந்தரை அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்தது. இதைக் கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் மருத்துவமனையில் பதற்றம் தொற்றிக்கொண்டது. பின்னர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த அவர்கள், பாம்பைப் பிடித்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதர்கள் அதிகம் இருப்பதால் விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மருத்துவமனைக்குள் புகுந்து விடுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க மருத்துவ நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.