வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (06/08/2018)

கடைசி தொடர்பு:11:15 (06/08/2018)

நீதிபதி கே.எம்.ஜோசப்பை மத்திய அரசு ஓரங்கட்டுவது ஏன்? - புதிய தகவல்

கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூவர் நாளை பதவியேற்க உள்ளனர். இதில், மூத்த நீதிபதியான கே.எம்.ஜோசப்பின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியத்தில் நான்கு நீதிபதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கொலிஜியம் பரிந்துரை செய்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தவர்தான் நீதிபதி கே.எம்.ஜோசப். அப்போது, இவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் பரிந்துரையை நிராகரித்தது. 

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க  சமீபத்தில் மத்திய அரசிடம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வினீத் சரண் ஆகியோர் பெயர்களுடன் மீண்டும் கே.எம்.ஜோசப்பின் பெயர் சேர்க்கப்பட்டது. கே.எம்.ஜோசப் நியமனத்தை மீண்டும் மத்திய அரசு நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இருந்தபோதிலும், கே.எம்.ஜோசப் விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக நீதிபதிகள் தங்கள் அதிருப்திகளைத் தெரிவித்து வருகின்றனர். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாளை பதவியேற்க உள்ள நீதிபதிகளில் கே.எம்.ஜோசப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதலில் இந்திரா பானர்ஜி, இரண்டாவது வினீத் சரண் இவர்களுக்கு அடுத்தபடியாக கே.எம்.ஜோசப் இடம்பெற்றுள்ளார். ஆனால், முதலில் கே.எம்.ஜோசப் பெயர்தான் இருக்க வேண்டும் என்கின்றனர் நீதிபதிகள். பணிமூப்பு அடிப்படையில் பார்த்தால் இந்திரா பானர்ஜி 4-வது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக கே.எம்.ஜோசப் வெளியிட்ட தீர்ப்பின் விளைவே மத்திய அரசால் ஓரம்கட்டப்படுகிறார் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவிக்கின்றனர். உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப், கடந்த 2016-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதனால் மீண்டும் அங்கு காங்கிரஸ் ஆட்சி நீடித்தது. இதன், காரணம்தான் கே.எம்.ஜோசப்பின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.