வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (06/08/2018)

கடைசி தொடர்பு:13:25 (06/08/2018)

கோபித்துச் சென்ற மனைவி... 3 பிள்ளைகளை ஆற்றில் வீசிய தந்தை... சித்தூரில் நடந்த கொடுமை

மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசிய நபரை போலீஸார் கைது செய்தனர். குழந்தைகளின் சடலங்கள் ஆற்றில் மிதந்ததை அடுத்தே அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு, திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதனால்,  அமராவதி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, புனித் (5), சஞ்சை (3) மற்றும் ராகுல் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், குடித்துவிட்டு தினமும் மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் வெங்கடேஷ். `இனியும் தொடர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது' என்றுகூறி கோபித்து தன் குழந்தைகளை உடன் அழைத்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு அமராவதி சென்றுவிட்டார். அவரை, மீண்டும் வீட்டுக்கு அழைத்துவர நேற்று இரவு மாமியார் வீட்டுக்குச் சென்ற வெங்கடேஷ் மீண்டும் சண்டை போட்டிருக்கிறார். 

அதன்பிறகு, தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெங்கடேஷ் சென்றிருக்கிறார். வீட்டுக்குச் செல்லும் வழியில் தன் மனைவிமேல் இருந்த கோபத்தில் மூன்று குழந்தைகளையும் ஆற்றில் தூக்கிவீசி எறிந்து கொலைசெய்து விட்டு, வீடு திரும்பி இருக்கிறார். எதுவும் நடக்காததுபோல் அவர் வீட்டில் நிம்மதியாய் தூங்கியுள்ளார். இன்று காலை உறவினர்கள் குழந்தைகள் எங்கே என்று வெங்கடேஷிடம் கேட்டுள்ளனர். அதற்கு, `மூன்று குழந்தைகளையும் காணவில்லை; எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை' என நாடகம் ஆடியுள்ளார். 

இதனிடையில், குழந்தைகளின் சடலம் ஆற்றில் மிதந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், குழந்தைகளை ஆற்றில் வெங்கடேஷ் தூக்கி வீசியது தெரியவந்தது. 'இவ்வாறு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்வார் என கற்பனை செய்து பார்க்கவில்லை' என போலீஸிடம் அமராவதி தெரிவித்தார். குழந்தைகளை ஆற்றில் வீசியபோது தான் குடிபோதையில் இருந்ததாக வெங்கடேஷ் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.