சிறுமி கொலை - தடயவியல் சோதனையில் வெளிவரும் உண்மைகள்

காசியாபாத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றத்தை மறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. 

சிறுமி கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2-ம் தேதியிலிருந்து காணவில்லை. அதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர்கள் சிறுமி கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி சிறுமியின் உறவினர் வீட்டின் மேல்தளத்தில் ஒரு பேக் இருந்துள்ளது. அதைச்சுற்றி ஈக்கள் இருந்துள்ளது. அதைத் திறந்து பார்த்தபோது பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமியின் உறவினர் இல்லத்தில் வாடகைக்கு வசிக்கும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் தற்போது மாயமானதால் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், தடயவியல் சோதனையில் இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ``சிறுமியை 2-ம் தேதியிலிருந்து காணவில்லை. கடந்த 4-ம் தேதி அவரின் உறவினர் வீட்டின் மேற்கூரையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அருகில்  உறவினர் வீடும் அமைந்துள்ளது. அங்கு கார் ஓட்டுநர் ஒருவர் வாடகைக்கு இருப்பதாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். அந்த நபரை கடந்த சில நாள்களாகக் காணவில்லை. இதையடுத்து அவர் மீது சந்தேகம் வலுத்தது. அவரது குடியிருப்பில் சென்று பார்த்தபோது தரை மற்றும் சுவர்களில் ரத்தக்கறை படிந்துள்ளது. இதையடுத்து அந்த நபரின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த துணிகள் பெரும்பாலும் சமீபத்தில்தான் துவைக்கப்பட்டிருந்தது. அதை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தினோம். அதில் ரத்தக்கறை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. சுவற்றில் படிந்திருந்த ரத்தக்கறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அந்தவீட்டின் மேல்தளத்தில் இருந்து ஒரு போர்வை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும். குற்றவாளியை கைது செய்த பின்னரே கொலைக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும்” என்றார்.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் அந்த நபர் அப்பகுதியில் இருந்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!