வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/08/2018)

கடைசி தொடர்பு:16:21 (06/08/2018)

‘பெயரை மாற்றுவதால் ரயில் சரியான நேரத்துக்கு வருமா?’ - உ.பி அமைச்சர் அதிரடிப் பேச்சு!

`முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவதால் நேரத்துக்கு ரயில் வராது'' என அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள முகல்சராய் ரயில் நிலையம், கடந்த ஜூன் 5-ம் தேதியன்று தீனதயாள் உபாத்யாய் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. இது, இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பாக இயங்கும் நான்காவது ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தின் முகப்புப் பலகையைத் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு, இதன் முகப்புப் பலகையைத் திறந்துவைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, அமித்ஷாவின் வருகையினாலேயே இந்த ரயில் நிலையத்தில் காவி நிற பெயின்ட் பூசப்படுவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்நிலையில், 'ரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவதால் மட்டும் ரயில் குறித்த நேரத்தில் வந்துவிடாது. ரயில்வே துறையின் தவறான நிர்வாகத்தை மத்திய அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்' என சுஹல்தேவ் பாரதிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பூர் தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.