வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (06/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (06/08/2018)

பேட்டியை பாதியிலேயே முடித்துவிட்டுச் சென்ற பினராயி விஜயன்!

பேட்டியின்போது டி.வி சேனல் மைக் இடித்ததால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பாதியிலே புறப்பட்டுச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பினராயி விஜயன்

கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றதிலிருந்து அவருக்கும் மீடியாக்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ஆலப்புழா கோட்டயம் மாவட்டங்களில் மழை பாதிப்பு சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு அவர், ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது மீடியாக்கள், பேட்டி எடுப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு மைக்கை நீட்டி, முக்கியத் தீர்மானங்கள் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, "குட்டநாட்டைப் பற்றி..." என பேசத் தொடங்கியதும், முதல்வரின் காவலர் ஒருவர் மீடியாக்களை கையால் ஒழுங்குபடுத்தியிருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு டி.வி சேனல் மைக், முதல்வர் பினராயி விஜயன் மீது இடித்துக் கீழே விழுந்திருக்கிறது. இதனால் பேட்டி அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றுவிட்டார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.