வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (06/08/2018)

கடைசி தொடர்பு:17:12 (06/08/2018)

முதல்முறையாக உச்சநீதி மன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள்! ஓர் அறிமுகம்!

மூவரில் ஒருவரான நீதிபதி ஆர். பானுமதி, சாமியார் பிரேமானந்தாவுக்கு இவர் அளித்த இரட்டை ஆயுள் தண்டனை அளித்தவர்!

முதல்முறையாக உச்சநீதி மன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள்! ஓர் அறிமுகம்!

ன்று பாரதி இருந்திருந்தால், ஆனந்தக் கூத்தாடியிருப்பான். ஆம்! உச்ச நீதிமன்றத்தின் 68 ஆண்டுக்கால வரலாற்றில், முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள்கொண்ட பெஞ்ச் அமைந்திருக்கிறது. இது, பாரதிக்கும் அவன் வழி நடப்பவர்களுக்கும் ஆனந்த நிகழ்வுதானே. நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி இந்து மல்ஹோத்ரா, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர்தாம் உச்ச நீதிமன்றத்தின் அந்த மூன்று நீதிபதிகள்.

நீதிபதி இந்திரா பானர்ஜி

1989-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், நீதிபதி இருக்கையில் அமர்ந்தார். அவர்தான், பாத்திமா பீவி. பின்னாளில் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார். இவருக்குப் பிறகு, சுஜாதா மனோகர், ரூமா பால், ஞான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் எனச் சில பெண் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில், வெவ்வேறு காலகட்டங்களில் நீதி வழங்கினர். 2010-ம் ஆண்டு ஞான் சுதா மிஸ்ராவும், 2011-ம் ஆண்டில், ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 2 பெண் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய புதிய வரலாறு படைக்கப்பட்டது. ஆனால், வெகு சீக்கிரமே நீதிபதி ரஞ்சனா ஓய்வு பெற்றுவிட, மறுபடியும் ஒற்றைப் பெண் நீதிபதி என்ற நிலைமை தொடர்ந்தது. 

நீதிபதி ஆர்.பானுமதி

உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் வரிசையில் ஆறாவதாகப் பதவியேற்றவர், ஆர்.பானுமதி. 2014-ம் ஆண்டு நீதிபதியாகப் பதவியேற்றார். இவர், தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியபோது, சாமியார் பிரேமானந்தாவுக்கு இவர் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை, உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, வீரப்பனை சுட்டுக் கொன்ற சிறப்புப் படையினருக்கு இரட்டைப் பதவி உயர்வு உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பானுமதி, ஜூலை 2020-ம் ஆண்டில் ஓய்வுபெறுவார்.

நீதிபதி இந்து மல்ஹோத்ரா

இந்து மல்ஹோத்ரா, இந்த வருடம் ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். சுமார் 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரின் திறமை காரணமாக, எந்த உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பதவி வகிக்காமலேயே, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகும் முதல் பெண் நீதிபதி இவர்தான். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக உடன்பாட்டுச் சிக்கல்களில் வாதாடுவதில் வல்லவர் இந்து மல்ஹோத்ரா. இவர் 2021-ம் ஆண்டு ஓய்வுபெறுவார். 

இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்புக்குரியவர். கொல்கத்தா உயர் நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் என மூன்று மாநகர உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவர். தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாளை (ஆகஸ்ட் 7, 2018) பதவி ஏற்கிறார். இவருடைய பதவிக் காலம் செப்டம்பர் 2022 வரை இருக்கும்.

இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 68 வருடப் பயணத்தில், மூன்று பெண் நீதிபதிகள் ஒரே காலகட்டத்தில் தொடர்ந்து பணியாற்றப்போகிறார்கள். வாழ்த்துகள் நீதி தேவதைகளே!


டிரெண்டிங் @ விகடன்