துணை நிலை ஆளுநர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் குப்பைகளைக் கொட்டுங்கள்..! உச்சநீதிமன்றம் காட்டம் | Dump Garbage Near Delhi Lt Governor's House..! Supreme court condemns

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (07/08/2018)

கடைசி தொடர்பு:08:20 (07/08/2018)

துணை நிலை ஆளுநர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் குப்பைகளைக் கொட்டுங்கள்..! உச்சநீதிமன்றம் காட்டம்

`குப்பைகளைக் கொண்டுபோய் துணைநிலை ஆளுநர் இல்லம் அமைந்திருக்கும் ராஜ் நிவாஸ் பகுதியில் கொட்டுங்கள்' என்று டெல்லி மாநகராட்சியை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. 

உச்சநீதிமன்றம்

டெல்லியில் உருவாகும் குப்பைகளைக் கொட்டுவதற்கு டெல்லி மாநகராட்சி சோனியா விஹார் என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்தது. அதற்கு, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தெற்கு டெல்லி மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளைக்கு 3,600 டன் குப்பை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 1,800 டன் குப்பைகள், குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த கூடுதல் நீதிபதி பிங்கி ஆனந்த், `கிழக்கு டெல்லி மாநகராட்சி, சோனியா விஹார் பகுதியில் குப்பைக் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' என்று தெரிவித்தார். அதற்கு காட்டமாகப் பதிலளித்த நீதிபதிகள், 'குப்பையைக் கொட்டுவதற்கு அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து கேள்வி எழுப்புவதற்கு மக்களுக்கு முழு உரிமை உள்ளது. குப்பையைக் கொண்டு போய், துணை நிலை ஆளுநர் வீடு அமைந்திருக்கும் ராஜ் நிவாஸ் பகுதியில் கொட்டுங்கள். மக்களை, இந்த மாதிரி மோசமாக நடத்தாதீர்கள். குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 14-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்' என்று  உத்தரவிட்டனர்.